‘Tada’ J Abdul Rahim Tamil News: கர்நாடகாவின் உடுப்பியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் மாநிலம் முழுதும் பரவி பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நாடு அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது விசாரணை நடப்பட்டு வருகிறது.
ஹிஜாப் விவகாரத்தில் பல்வேறு அமைப்பினரும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் கருத்துகளை பதிவு செய்தும், போராட்டம் நடத்தியும் வருகின்றனர். இந்நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பாக, இந்திய லீக் கட்சியின் தேசிய செயலாளர் ‘தடா’ அப்துல் ரஹீம் தனது சமூக வலைதள பக்கம் வாயிலாக ‘பூணுல் அறுப்பு போராட்டம்’ என்கிற போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தார்.
அவர் பகிர்ந்து இருந்த அந்த நீண்ட பதிவில்,”காஞ்சி சங்கர மடத்தில் இருந்து கோட்சேவின் வாரிசுகள் அணியும் பூணூல் அறுக்கும் போராட்டம் தொடர்வோம். சமீபத்தில் கர்நாடகாவில் இருந்து கோட்சேவின் வாரிசுகளால் ஆரம்பிக்கப்பட்ட ஹிஜாபுக்கு எதிரான பாசிச பயங்கரவாதம் தமிழ்நாட்டிலும் பரவி வருகிறது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோட்சேவின் வாரிசுகள் அணியும் பூணூல் அறுக்கும் போராட்டம்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், “மதுரை மேலூர் அல் அமீன் பள்ளி வாக்கு சாவடியில் பாஜக முகவர் (சங்கி ஒருவர்) முஸ்லிம் பெண்ணின் ஹிஜாபை அகற்ற சொல்லி பிரச்சினை செய்து உள்ளார் அப்பெண்ணோ எனது முகம் தெரிகிறது அப்படி இருக்கையில் எதற்காக முக்காடு நீக்க வேண்டும் அப்படியே முக்காடு நீக்க வேண்டும் என்றால் ஓட்டு மை இடும் அரசு அதிகாரி முன்பு தானே எனது அடையாள அட்டை காட்டி எனது முக்காடை நீக்கி முகத்தை காட்ட வேண்டும் நீங்க எதற்காக ஹிஜாபை அகற்ற சொல்கிறீர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
அதற்கு வக்காலத்து வாங்கிய கோட்சேவின் வாரிசுகளான ஆர்எஸ்எஸ் பிராமண சங்கி நாராயணன் திருப்பதி உட்பட சில ஆர்எஸ்எஸ் பிராமண சங்கிகள் முகத்தை காட்டாமல் எப்படி ஓட்டு போட அனுமதிப்பீர்கள் என விதண்டாவாதம் செய்து வருகின்றனர்.” என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தடா அப்துல் ரஹீம் மீது சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு வழக்கு பதிவு செய்து, கைது செய்துள்ளது. அவர் மீது ஐபிசி பிரிவு 153 (கலவரத்தைத் தூண்டுதல்) மற்றும் 505 (1) (சி) (வகுப்புச் சமரசத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், அவரை மார்ச் 10-ம் தேதி வரை விசாரணைக்காக காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“