பெங்களூரு-பெங்களூரில் குடிநீர் வடிகால் வாரியத்துறையின் சார்பில் 110 கிராமங்களில் கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்ட சாலைகள், இரண்டு மாதங்களில் சீரமைக்கப்படுமென மாநகராட்சி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 110 கிராமங்களில் குடிநீர் குழாய் பதிப்பு மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்கான பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது.இப்பணிகளால், 800 கி.மீ., சாலைகள் குண்டும், குழியுமாக மாறிவிட்டன. மழைகாலத்தில், மழைநீர் தேங்கியும், பொதுமக்கள் நடப்பதற்கு வழியில்லாமலும் உள்ளன.இப்பணிகள் குறித்து பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடந்த வருவாய் கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது.மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குப்தா கூறியதாவது:குழிகள் தோண்டப்பட்ட 800 கி.மீ., சாலைகளில் சுழற்சி முறையில் சீரமைப்பு பணிகள் நடக்கும். சாலைகளின் உறுதியும் பாதுகாக்கப்படும்.பிப்ரவரி துவக்கத்தில் மாநில அரசு சாலைகளை சீரமைப்பதற்கு 852 கோடி ரூபாய்க்கான டெண்டருக்கு ஒப்புதல் அளித்துள்ளது.கே.ஆர்.புரம், பெங்களூரு தெற்கு, எலஹங்கா, மகாதேவபுரா உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில் சாலை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இது குறித்து நாள்தோறும் அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement