கீவ்: உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா இரண்டாவது நாளாக நடத்தி வரும் நிலையில் இதுவரை ரஷ்யாவின் 30 ராணுவ டேங்குகள், 800 ரஷ்ய வீரர்களை வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு துறை துணை அமைச்சர் ஹனா மல்யார் தனது ட்விட்டர் பக்கத்தில், எதிரிகள் தரப்பில் இதுவரை 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்க்ள், 30 ராணுவ டாங்குகள், 130 ஏவுகணை யூனிட்டுகளை உக்ரைன் படைகள் வீழ்த்தியுள்ளன என்று ட்வீட் செய்துள்ளார். இது உக்ரைன் மொழியில் பதிவாகியுள்ளது.
முன்னதாக, ரஷ்யாவுக்கு எதிரான போராட்டத்தில் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி வருத்தம் தெரிவித்திருந்தார். முதல் நாள் போரில் உக்ரைன் தரப்பில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 137 பேர் பலியாகினர் என்று தெரிவித்தார்.
2வது முறையாக வேதனை.. இதற்கிடையில் இன்றும் உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார். அதில், “இரண்டாவது நாளாக நாங்கள் தன்னந்தனியாகப் போராடி வருகிறோம். உலக நாடுகள் வேடிக்கைப் பார்க்கின்றன. வாக்குறுதிகளை மீறி ரஷ்யப் படைகள் பொதுமக்கள் வாழும் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. உலக நாடுகள் எங்களுக்கு உதவ முன் வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்ரேஸ், உக்ரைனில் பொதுமக்களின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது ஜி7 நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. பொருளாதார ரீதியாக ரஷ்யாவை முடக்கி போரை நிறுத்தும் முயற்சியில் தான் இதுவரை ஈடுபட்டு வருகின்றன. மற்றபடி அமெரிக்கா தனது படைகளை அனுப்பப்போவதில்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளது. நேட்டோவில் இன்னும் உக்ரைன் உறுப்பு நாடாகாத நிலையில் நேட்டோ நேரடியாக தாக்குதலில் இறங்க இயலாது சூழலே நிலவுகிறது. இவ்வாறாக உலக நாடுகள் பொருளாதாரத் தடைகளை மட்டும் அமல்படுத்திவிட்டு தயக்கங்கள் காட்டி வருகின்றன.
அடுத்தது என்ன? உக்ரைனை ஆக்கிரமிக்கப்போவதில்லை எனக் கூறிய ரஷ்ய அதிபர் தனது தாக்குதல் வரம்பை எதிர்பார்த்தபடியே கிழக்கே உள்ள டானெஸ்ட்ஸ், லுஹான்ஸ்குடன் நிறுத்தவில்லை இப்போது செர்னோபில் வரை சென்றுவிட்ட ரஷ்யப் படைகள் கிவ்வை குறிவைத்துத் தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்ய அதிபரின் வியூகம், ரஷ்யாவை அரசியல் ரீதியாக செயலிழக்கச் செய்துவிட்டு தற்போதுள்ள வொலொடிமிர் ஜெலன்ஸ்கி ஆட்சியை அப்புறப்படுத்திவிட்டு தனக்கு ஆதரவான ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே என்று சர்வதேச போர் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்த ராணுவ நடவடிக்கையும் கூட ரஷ்யாவை சுற்றியுள்ள சிறிய நாடுகளுக்கான எச்சரிக்கை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.