Thiyya listed under BC only in GO : பல மொழிகள் பேசும் மாகாணமாக இருந்த சென்னையில் மக்கள் அனைவரும் ஒரே அளவில் தான் நடத்தப்பட்டார்கள். 1956ம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தாய்மொழி, தந்தை மொழி என்பதையெல்லாம் கடந்து வாழ்வாதாரத்தை வழங்கும் பகுதியில் மக்கள் வாழத் துவங்கினார்கள். கோவையில் அதிக அளவில் மலையாளிகள் இருப்பதையும் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ் சமூகத்தினர் வாழ்வதையும் நாம் பார்க்கின்றோம். மற்றொரு மாநிலத்தில் பிறந்து வளர்ந்து அதன் பழக்க வழக்கங்கள் மற்றும் பண்பாடுகளில் ஊறிவிட்ட, பிற மொழி பேசும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும்.
முன்பு, சமூக நீதி பேசும் மண்ணில் சாதிச் சான்றிதழுக்காக போராடி, இன்று இட ஒதுக்கீட்டிலும் நுழைவுத் தேர்விலும் பிரச்சனைகளை சந்திக்கும் நீலகிரி திய்யாக்களின் தொடர் போராட்டத்தை விளக்குகிறது இந்த கட்டுரை.
“டி.என்.பி.எஸ்.சி. மூலம் அரசுப் பணிக்கு செல்ல திய்யா வகுப்பைச் சேர்ந்த பட்டதாரிகள் விரும்புகிறார்கள். அரசு 2020ம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இந்த பிரிவை இணைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. இணையத்தில் பி.சி. பட்டியலில் இவர்களின் பிரிவு இடம் பெறவில்லை” என்று கூறினார் பெயர் கூற விரும்பாத நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்.
இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு அல்லது அப்டேட்டில் தாமதம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற அனுமானத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரனை தொடர்பு கொள்ள முயன்றது தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ். அழைப்பு மற்றும் குறுஞ்செய்திக்கு அமைச்சரிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
அதுல்ய மிஷ்ரா குழுவும் பிற்படுத்தப்பட்டோர் அங்கீகாரமும்
ஈழவர்-திய்யாக்கள் பிரிவினர், தென் தமிழகத்தில் இருப்பதைப் போன்றே, நீலகிரியிலும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். படுகர்கள், தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு அடுத்து, 7.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட மலை மாவட்டத்தில், 1.5 லட்சம் ஈழவர்-திய்யா மக்கள் வசித்து வருகின்றனர் என்று கூறுகிறது தமிழ் இந்து வெளியிட்ட கட்டுரை ஒன்று.
1992ம் ஆண்டு முதல் ஈழவர் – திய்யா மக்களுக்கு சாதிச் சான்றுகள் வழங்கப்படுவதை தமிழக அரசு நிறுத்தி இருந்தது. தங்களின் குழந்தைகளுக்கு இதனால் எவ்விதமான சலுகைகளும் கிடைக்கவில்லை என்பதையும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தங்களின் சாதியை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தொடர்ந்து வைத்து வந்தனர் இவ்வகுப்பினர்.
வருவாய்துறை செயலாளர் அதுல்ய மிஷ்ரா தலைமையிலான நான்கு நபர் குழு ஒன்றை அமைத்து, தமிழகத்தில் உள்ள ஈழவர்கள் மற்றும் திய்யாக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் அங்கீகாரம் வழங்க தேவையான புறக்காரணிகள் என்ன என்பதை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குமாறு அதிமுக அரசு 2020ல் உத்தரவு பிறப்பித்தது.
கமிட்டியின் பரிந்துரையை ஏற்று, 2020ம் ஆண்டு திய்யா பிரிவினருக்கு பிற்படுத்தப்பட்டோர் அங்கீகாரத்தை தமிழக அரசு வழங்கியது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல வாரியத்தின் செயலாளர் பி. சந்திரமோகன் அது தொடர்பான அரசாணையை (G.O 55) வெளியிட்டார்.
தமிழக பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடி சட்டம் 1993க்கு (கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசின் வேலைகளில் இட ஒதுக்கீட்டு சட்டம் 1993-த்தில் இடம் பெற்றுள்ள 3வது ஷரத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி அன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்ட அறிவிப்பாணையில் (No.II(1)/BCMBCMW/36(a)/2008) திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.
மேற்கோள் காட்டப்பட்டுள்ள அறிவிப்பாணையில் உள்ள அட்டவணையில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், பிற்படுத்தப்பட்ட கிறித்துவ வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் பிரிவு ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இடம் பெற்றிருக்கும் துணைப் பிரிவுகளில் (sub-heading I) 109க்கு அடுத்தபடியாக 109-A- வாக திய்யா வகுப்பு இடம் பெறும் என்று கூறப்பட்டிருந்தது.
1976ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் (எண் 58), தமிழகத்தில் இருக்கும் நபர்களுக்கும், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் இனத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே பிற்படுத்தப்பட்டோர் அங்கீகாரம் வழங்கப்பட்டும் என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஒரு இனத்தை சேர்ந்த வெளி மாநிலத்தவர்களும் பிற்படுத்தப்பட்டோராக கருதப்படமாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து 1976ம் ஆண்டில், தமிழக எல்லைக்கு வெளியே உள்ளனர் என்ற அடிப்படையில் மலபார் மாவட்டங்களான பொன்னானி, பாலக்காடு, வள்ளுவநாடு மற்றும் எர்நாடு திய்யாக்களை தமிழக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கியது தமிழக அரசு. திய்யா மற்றும் ஈழவர் மக்களின் கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு 44 ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் அங்கீகாரத்தை வழங்கியது தமிழக அரசு.
யார் இந்த திய்யாக்கள்?
மத்திய மற்றும் வட கேரளத்தை தமிழகத்துடன் இணைக்கும் பல பகுதிகளில் கூடலூர் கணவாயும் ஒன்று. அங்கே வாழும் மக்கள் தீயர் என்று அழைக்கப்படுகின்றனர். ஈழவர் பிரிவில் முதன்மையானவர்கள் இவர்கள். வயநாட்டில் வாழும் மக்களை வயவர்கள் என்று குறிப்பிடுவதும் உண்டு. ஈழவர் சமூகத்தினரை வயவர் என்றும் பல நெடுங்காலமாக அம்மக்கள் அழைத்து வருகின்றனர் என்கிறது தமிழ் கல்வெட்டு ஆய்வாளர் எஸ். ராமச்சந்திரனின் ஆராய்ச்சி.
கேரளம் மட்டுமின்றி தென்னிந்தியாவில் அவர்கள் பரவி உள்ளனர். கேரளத்தின் வடக்கு பகுதியான மலபாரில் வசிக்கும் இவர்கள் திய்யாக்கள் என்றும், தெற்கு கேரளத்தில் வசிக்கும் மக்கள் ஈழவர்கள் என்றும், தமிழகத்தில் இல்லத்துப் பிள்ளைமார்கள், நாடார்கள், வில்லவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். துளு பகுதியில் பில்லவாக்கள் என்றும் ஆந்திரா – கர்நாடகா பகுதியில் இவர்கள் ஈடிகா என்றும் அழைக்கப்படுகின்றனர் என்கின்றனர் மானுடவியலாளர்கள். குமரி தமிழகத்தோடு இணைந்த பிறகு, குமரி, நெல்லை செங்கோட்டையில் இருக்கும் ஈழவர்களுக்கு மட்டும் பிற்படுத்தப்பட்டோர் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கணிசமான மக்கள் தொகையைக் கொண்டுள்ள திய்யாக்கள் நடத்திய போராட்டத்தின் முடிவில் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அரசாணை கடந்த 2020ம் ஆண்டு வெளியிடப்பட்ட நிலையில் மேற்கொண்டு எந்த விதமான நகர்வும் இன்றி, கிடப்பில் போட்டப்பட்ட திட்டம் போலவே உள்ளது பிற்படுத்தப்பட்டோர் அங்கீகாரம். நீட் தேர்வு, சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுத விரும்பும் போட்டியாளர்கள் தங்களின் பிரிவு, பி.சிக்கு கீழ் வரவில்லை என்பதால் அதிக அளவில் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். டி.என்.பி.எஸ்.சி. இணையத்தில் எங்களின் சாதிப் பெயர் இல்லை. அப்படி என்றால் அரசு வேலைகளுக்கு சேர எங்களுக்கு தகுதி இல்லையா என்று கேட்கின்றனர் இம்மக்கள்.
திமுகவிற்கு இது தலையாய கடமை
”திராவிட சித்தாந்தத்தை தமிழகம் முழுவதும் பரப்பிய பெருங்கிழவன் பெரியார், இந்த மண்ணில் எங்கள் வகுப்பினர் பட்ட துயரை கண்டு தான் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். இன்று வைக்கம் வீரர் என்று அழைக்கப்படும் பெரியாருக்கு தெரியும் இந்த மண்ணில் திய்யாக்கள் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்று. அவர் காட்டிய அறத்தின் வழியில் நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகமும், முதல்வர் முக ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும்” என்று கூறுகிறார் உதகையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜயன்.
இந்த நாட்டின் குடிமகன் என்பதற்கு என்னிடம் சான்றுகள் இருக்கிறது. வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது, ரேஷன் அட்டை இருக்கிறது. ஆதார் தருகிறார்கள். திய்யா சமூகம் மத்திய பட்டியலில் இதர பிற்படுத்தப்பட்டோர் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தில் சாதி சான்றிதழ் பெறுவதற்கு நாங்கள் சிரமப்பட்டோம். சாதியே இல்லை என்று நினைப்பவன் நான். சமூக ரீதியில் பிற்படுத்தப்பட்ட, சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக இந்த இட ஒதுக்கீடு உதவும் பட்சத்தில் அது எங்களின் பிள்ளைகளுக்கும் தேவை என்று நினைக்கின்றோம்.
”தேர்தல் நெருங்கி வருகின்ற சூழலில், கண்துடைப்பு நாடகத்தை தான் தமிழக அரசு நடத்தியுள்ளது. பல தலைமுறைக்கு முன்பு தமிழகத்திற்கு நாங்கள் குடி பெயர்ந்தோம். என் தாய் மொழி மலையாளமாக இருந்தாலும் நான் பிறப்பால் தமிழன் தானே?. இன்று எங்கள் பிள்ளைகள் தகுதி தேர்வில் வெற்றி பெற்று கலந்தாய்வுக்கு சென்றால் பி.சி. பட்டியலில் எங்கள் பிரிவு இல்லை, தாய் மொழி என்ன? , பெற்றோர்களின் பூர்வீகம் எது? என்றெல்லாம் கேட்கின்றனர். அரசு தரும் அடையாள சான்றிதழோடு தான் நாங்கள் செல்கின்றோம். ஆனாலும் எங்களை மீண்டும் மீண்டும் சோதிக்கின்றனர். நிர்வாக ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் எங்கள் குழந்தைகள். சமூக நீதி குறித்து தொடர்ந்து பேசும் தமிழக அரசு இதில் உடனே தலையிட்டு குமரி, நெல்லை தவிர்த்து இதர பகுதிகளில் வாழும் திய்யாக்களுக்கும் பி.சி. அங்கீகாரத்தை முறையாக தருவதோடு டி.என்.பி.எஸ்.சி போன்ற தேர்வாணையங்களில் எங்களின் பிரிவு பி.சி.க்கு கீழ் இடம் பெறுவதையும் உறுதி செய்ய வேண்டும்” என்றும் கூறினார்.
நீட்டில் 505 மதிப்பெண்; தந்தையின் மரணம்; நிறைவேறுமா MBBS கனவு? முதல்வர் உதவியை நாடும் மாணவன்
அரசாணைக்கு மதிப்பே இல்லை
தமிழகத்தில் திய்யாக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கான அங்கீகாரம் வெறும் காகித அளவில் நின்று விடுகிறது. இன்று வரை நீலகிரி பகுதியில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களாக ஆயிரக்கணக்கான திய்யாக்கள் பணியாற்றி வருகின்றனர். பொள்ளாச்சி, பாலக்காட்டினை ஒட்டிய பகுதியில் பாட்டன், முப்பாட்டன் காலத்தில் இருந்து திய்யாக்கள் இருக்கின்றனர். மொழி வாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு தானே தமிழகமும் கேரளமும் உருவானது. அதற்கு முன்பு வரை அது மதராஸ் தானே என்று நம்மிடம் பேச ஆரம்பித்தார் உன்னிக்கிருஷ்ணன்.
ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலான யோஜனம் ஈழவ திய்யா பேரமைப்பின் பொதுச் செயலளாராக இருக்கும் அவர், “தமிழகத்தில் ஈழவர்கள், திய்யாக்களின் மக்கள் தொகை எவ்வளவு இருக்கும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அறிந்து கொள்ள விண்ணப்பித்தேன். ஆனால் அரசிடம் இது தொடர்பாக எந்த விதமான தரவுகளும் இல்லை என்று பதில் அனுப்பியுள்ளனர் ஒரு அரசிடமே எங்களைப் பற்றிய தரவுகள் இல்லாத பட்சத்தில் எங்களின் தேவைகள் என்ன என்று அறிந்து எப்படி திட்டங்களை வகுப்பார்கள்?” என்று கேள்வி எழுப்புகிறார்
”எனக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இரண்டு பேரும் மருத்துவம் படிக்கின்றனர். அவர்கள் இட ஒதுக்கீடு என்றெல்லாம் செல்லவில்லை. அவர்கள் படித்து மெரிட்டில் உள்ளே சென்றனர். ஆனால் எங்கள் சமூகத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் இதே போன்ற பொருளாதார சூழல் இருக்கிறதா என்று கேள்வி கேட்டால், இல்லை. சமூக, பொருளாதார ரீதியில் எங்கள் மக்கள் மிகவும் பின் தங்கியுள்ளனர். அரசாணை 2020-ல் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதனால் எங்களுக்கு எந்த விதமான பலனும் இல்லை” என்றும் கூறுகிறார் உன்னிக்கிருஷ்ணன்.
குரூப் 2, குரூப் 2ஏவுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், கொரோனா காலகட்டத்திற்கு பிறகு நடக்கும் தேர்வுகளில் பங்கேற்போமா அல்லது பொதுப்பிரிவில் தான் போட்டியிட வேண்டுமா என்ற கேள்வியுடன் அரசின் பதிலுக்காக காத்திருக்கின்றனர் திய்யா வகுப்பு இளைஞர்கள்.