லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குஷிநகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது,
“சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியின் போது குற்றவாளிகள் கை ஓங்கியிருந்தது. மாபியாக்கள் மற்றும் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்ட வேண்டுமென்றால் அகிலேஷ் யாதவை வீட்டிலேயே உட்காரச் செய்யுங்கள். யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஆசாம் கான் மற்றும் முக்தர் அன்சாரி போன்ற குற்றவாளிகள் ஒளிந்து கொண்டனர்.
அகிலேஷ் யாதவை வீட்டிலேயே உட்காரச் செய்தால் தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும்.
உத்தரபிரதேச மாநில முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் மிக முக்கிய காரணமாக இருந்தன.பொதுமக்களின் முன் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்த ரிப்போர்ட் கார்டு பாஜக கையில் உள்ளது. பிற அரசியல் கட்சிகளிடம் அத்தகைய ஒன்றுமில்லை.
சமாஜ்வாதி ஆட்சிக்காலத்தில் ராம ஜென்மபூமி தொடர்பாக போராடிய ‘ராம பக்தர்கள்’ மீது அக்கட்சி தாக்குதல் நடத்தியது. ஆனால் உங்கள் ஓட்டுகளால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், இப்போது ‘ராமர் கோயில்’ மிகப்பெரியதாக கட்டப்பட்டு வருகிறது. இது தான் உங்கள் ஓட்டின் சக்தி. அத்தகைய வாக்குகளை பாஜகவிற்கு அளியுங்கள்.
குஷிநகரில் பாஜக ஆட்சியால் புதிதாக சர்வதேச விமானநிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், உலகம் முழுவதிலுமிருந்து புத்தர் பக்தர்கள் நேரடியாக இங்கு வந்து தரிசனம் செய்யலாம். இதனால் சுற்றுலா துறை வளர்ச்சியடையும்.”
இவ்வாறு ஜே பி நட்டா பேசினார்.
புத்தர் இறுதியாக ஓய்வெடுத்த இடமாக குஷிநகர் கருதப்படுகிறது. குஷிநகர் தான் கவுதம புத்தர் இறந்த பிறகு மகாபரிநிர்வாணம் அடைந்த இறுதித் தலமாகும். இதனால் புத்த மத்தினரின் முக்கியமான புனித தலங்களில் ஒன்றாக குஷிநகர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.