மாஸ்கோ-”ரஷ்யா மீது போர் தொடுப்போருக்கு அணு ஆயுதங்களால் பதிலடி தரப்படும்,” என, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில், அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டோனட்ஸ்க் மற்றும் லுஹன்ஸ்க் பிராந்தியங்களின் தன்னாட்சிக்கு, ரஷ்யா அங்கீகாரம் வழங்கியது. இதையடுத்து கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகவும், உக்ரைன் ராணுவத்திற்கு எதிராகவும் போரிட, ரஷ்ய அதிபர் புடின் நேற்று முன்தினம் ராணுவத்தை அனுப்பி வைத்தார். புடின், உக்ரைன் மீதான போர் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன், உலக நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்கு அணு ஆயுதம் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அப்போது அவர் பேசியதாவது:உலகின் மிக வலிமையான அணு ஆயுதங்கள் உள்ள நாடாக, ரஷ்யா விளங்குகிறது. அதுமட்டுமின்றி, ஏராளமான அதிநவீன போர் ஆயுதங்களும் ரஷ்யாவிடம் உள்ளன. அதனால் ரஷ்யாவை யார் தாக்கினாலும், அவர்கள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரும்.இவ்வாறு அவர் பேசினார்.
பல ஆண்டுகளுக்கு பின் உலக தலைவர் ஒருவர், தன்னிடம் அணு ஆயுதங்கள் உள்ளதை பகிரங்கமாக தெரிவித்து எச்சரித்துள்ளார். இது ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்காக படைகளை அனுப்பும் அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
Advertisement