புதுடெல்லி:
கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டன. அதன்பின்னர் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பள்ளிகளில் முழுமையாக நேரடி வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, டெல்லியில் ஏப்ரல் 1 முதல் அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
“வேலையிழப்பு காரணமாக மக்கள் கஷ்டங்களை எதிர்கொள்வதாலும், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து நிலைமை சீரடைந்திருப்பதாலும் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெறுகிறது. எனவே, பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 1ம் தேதி முதல் திறக்கப்பட்டு, முழுவதும் நேரடி வகுப்புகள் நடத்தப்படும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ரூ.500 ஆக குறைக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். அரசு உன்னிப்பாக கண்காணிக்கும்” என கெஜ்ரிவால் டுவிட்டரில் கூறி உள்ளார்.
இதற்கு முன்பே அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் என இரண்டு முறைகளிலும் பாடம் நடத்தப்பட்டது. 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது நர்சரி முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட உள்ளன.