புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியிடம், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்த புகார் குறித்து கேள்வி கேட்டபோது, ‘ஆம், எனக்கு தீவிரவாதிகள் தொடர்பு உள்ளது’ என அதிரடியாக அவர் கூறிய பதில் தொடர்பான காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேசம் சட்டப்பேரவை தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் அமேதியும் இடம் பெற்றுள்ளது. நேற்றுடன் முடிந்த இதற்கானப் பிரச்சாரத்திற்கு, அமேதி தொகுதி எம்பியும், மத்திய ஜவுளித்துறை அமைச்சருமான ஸ்மிருதி இரானி அமேதி வந்திருந்தார். அப்போது, பிரியங்காவிற்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகப் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்மிருதி இரானி. இந்நிலையில் இன்று உத்தர பிரதேசத்தில் பிரச்சாரத்திற்கு வந்த பிரியங்காவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கொடுத்த பிரியங்கா, ‘ஆம், எனக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. எனது தந்தை ராஜீவ் காந்தி தீவிரவாதிகளால் வெடி வைத்து கொல்லப்பட்டார்.
எனது பாட்டி இந்திரா காந்தியும் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன்மூலம், எனக்கு தீவிரவாதிகள் தொடர்பு உள்ளது உண்மைதான். இந்த நாட்டிற்காக எனது குடும்ப உறுப்பினர்கள் உயிர் தியாகம் செய்தனர். இதுபோல் தொடர்ந்து புகார் கூறுவதை இத்துடன் நிறுத்துங்கள்” எனக் காட்டமாக பதிலளித்தார். பிரியங்கா, கடும் கோபமாக அளித்த பதிலின் இக்காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.