இந்தியாவில் தொற்று குறைந்ததால் கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தலாம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

புதுடெல்லி: ‘‘நாடு முழுவதும் கரோனா தொற்று குறைந்துள்ளதால், கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து பரிசீலனை செய்யலாம்’’ என்று மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் கரோனா பரவலை தடுக்க அவ்வப்போது வழிகாட்டி நெறிமுறைகளை மத்தியஉள்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி வரும்மார்ச் மாதத்துக்கான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை செயலர் அஜய் பல்லா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் கரோனா தொற்று கணிசமாக குறைந்துள்ளது. எனவே, கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து மாநிலங்கள் பரிசீலிக்கவும். குறிப்பாக உள்ளூர் அளவில் கரோனா நிலவரத்தை நன்கு ஆராய்ந்த பிறகு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சமூக நிகழ்ச்சிகள், விளையாட்டு, கல்வி மற்றும் மதரீதியிலான நிகழ்ச்சிகளுக்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தலாம்.

மேலும், இரவு நேர ஊரடங்கை தளர்த்துவது குறித்தும் பரிசீலிக்கலாம். பொருளாதார நடவடிக்கைளாக பொது போக்குவரத்து, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், விடுதிகள், ஓட்டல்கள், பார்களுக்கான கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தலாம்.

முன்னெச்சரிக்கை

கட்டுப்பாடுகளை தளர்த்தும் அதேவேளையில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை பழக்கங்களை தொடர்ந்து கடைபிடிக்க மக்களை அறிவுறுத்த வேண்டும்.

மேலும், கரோனா தொற்று நிலவரம் குறித்து தொடர்ந்து கண்காணித்தல், கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளுதல், தடுப்பூசி பணிகளை கடைபிடித்தல், கரோனா தடுப்பு பழக்க வழக்கங்களை தொடர்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அஜய் பல்லா சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

13,166 பேருக்கு கரோனா

இந்தியாவில் நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 13,166 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது கரோனாவுக்கு நாடு முழுவதும் 1,34,235 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,22,46,884 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,13,226 ஆக உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை தெரி வித்துள்ளது.

– பிடிஐ

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.