உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. அப்போது ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா ஓட்டளிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக, இந்தியாவுக்கான ரஷ்ய துாதர் ரோமன் பாபுஷ்கின் தெரிவித்தார்.
”உக்ரைனின் மீதான ரஷ்ய படையெடுப்பின் பின்னணி குறித்து இந்தியாவுக்கு ஆழமான புரிதல் உள்ளது. எனவே, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா எங்களை ஆதரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,” என அவர் கூறினார்.
ரஷ்ய அதிபருடன் ஜிங்பிங் பேச்சு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், சீன அதிபர் ஷீ ஜிங்பிங் தொலைபேசி வாயிலாக நேற்று பேசினார். அப்போது, ‘கிழக்கு உக்ரைனின் நிலைமை மிக வேகமாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தை ரஷ்யாவும், உக்ரைனும் பேச்சு வாயிலாக தீர்த்துக் கொள்வதையே சீனா விரும்புகிறது’ என, அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் மனு!
வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதன் விபரம்: உக்ரைனில், 18 ஆயிரம் மாணவர்கள் உட்பட, 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை பத்திரமாக மீட்டு, இந்தியா அழைத்து வர உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியாவை சேர்ந்த மருத்துவ மாணவர்களை மீட்க உதவுமாறு, ஐ.எம்.ஏ., எனப்படும், இந்திய மருத்துவர் சங்கம், பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Advertisement