தரம்சாலா: இரண்டாவது ‘டி-20’ போட்டியில் துணிச்சலாக ஆடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-0 என சுலபமாக கைப்பற்றியது. ஸ்ரேயாஸ் கலக்கல் பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று ‘டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. லக்னோவில் நடந்த முதல் போட்டியில் வென்ற இந்தியா 1-0 என முன்னிலையில் இருந்தது. நேற்று இரண்டாவது போட்டி, தரம்சாலாவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பீல்டிங் தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்
இலங்கை அணிக்கு நிசங்கா, தனுஷ்கா குணதிலகா ஜோடி துவக்கம் கொடுத்தது. போட்டியின் 9 வது ஓவரை சகால் வீசினார். முதல் மூன்று பந்துகளில் 2 சிக்சர், 1 பவுண்டரி என அடித்து மிரட்டினார் குணதிலகா. 4வது பந்தில் சிக்சருக்கு ஆசைப்பட்ட குணதிலகாவை (38) வெங்கடேஷ் ‘கேட்ச்’ செய்து அனுப்பி வைத்தார்.
அடுத்து வந்த அசலங்காவை (2), 5வது பந்தில் அவுட்டாக்கினார் சகால். மிஷரா (1), ஹர்ஷல் படேல் பந்தில், வெங்கடேஷின் அசத்தல் ‘கேட்சில்’ வெளியேறினார். பும்ரா பந்தில் பவுண்டரி அடித்த சண்டிமால் (9), அடுத்த பந்தில் அவுட்டானார்.
நிசங்கா ஆறுதல்
புவனேஷ்வர் ஓவரில் 2 பவுண்டரி அடித்த நிசங்கா, ‘டி-20’ அரங்கில் 5வது அரைசதம் அடித்தார். ஹர்ஷல் படேல் வீசிய போட்டியின் 17 வது ஓவரில் 2 சிக்சர் அடித்தார் ஷனகா. பும்ரா ஓவரில் 3 பவுண்டரி அடித்து ‘ஷாக்’ கொடுத்தார் நிசங்கா. 5 வது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்த போது, ‘டி-20’ அரங்கில் தனது அதிகபட்ச ரன் எடுத்த நிசங்கா (75 ரன், 53 பந்து), புவனேஷ்வர் பந்தில் வீழ்ந்தார்.
ஹர்ஷல் படேல் வீசிய 20 ஓவரில் 23 ரன்கள் எடுக்கப்பட்டன. கடைசி 4 ஓவரில் 72 ரன் எடுத்த இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 183 ரன் குவித்தது. இந்தியா சார்பில் பும்ரா, புவனேஷ்வர் உட்பட 5 பவுலர்கள் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.
ஸ்ரேயாஸ் அசத்தல்
கடின இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. சமீரா வீசிய முதல் ஓவரில் கடைசி பந்தில் போல்டாகி ஏமாற்றம் தந்தார் ரோகித் (1). இஷானுடன் இணைந்த ஸ்ரேயாஸ், பெர்னண்டோ வீசிய 5வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். தடுமாறிய இஷான், 16 ரன்னில் அவுட்டானார். மனம் தளராத ஸ்ரேயாஸ், பிரவீன் ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்சர் விளாசினார். கருணாரத்னே பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஸ்ரேயாஸ், இத்தொடரில் இரண்டாவது அரைசதம் கடந்தார்.
சாம்சன் கலக்கல்
இந்திய அணி 11.3 ஓவரில் 100 ரன்களை எட்டியது இந்தியா. லகிரு வீசிய 13வது ஓவரில் 3 சிக்சர், 1 பவுண்டரி அடித்த சாம்சன் (39), கடைசி பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த ஜடேஜா, ரன் மழை பொழிந்தார். சமீரா வீசிய 6 வது ஓவரில் 1 சிக்சர், 3 பவுண்டரி உட்பட தன் பங்கிற்கு பவுண்டரி, சிக்சர் என அடிக்க, போட்டி இந்தியா பக்கம் திரும்பியது.
கடைசியில் ஜடேஜா ஒரு சூப்பர் பவுண்டரி அடிக்க, இந்திய அணி 17.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 186 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் (74), ஜடேஜா (45) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி 2-0 என தொடரை வென்றது.