நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி உரையாடினார். அப்போது, “வாக்களித்த மக்களை வீடுவீடாக சென்று பார்த்து நன்றி கூற வேண்டும்.
அந்த நேரத்தில் அவர்கள் இல்லாவிட்டால் கூட, அவர்கள் வீட்டில் இருக்கும்போது சென்று சந்திக்க வேண்டும். நன்றிகளை வார்த்தைகளாக கூறாமல் முதல்வரின் திட்டங்கள் மூலம் எடுத்து சொல்ல வேண்டும்.” என்றார்.
பிறகு செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், “கோவையில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம். இது மக்கள் முதல்வர் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. வார்டில் உள்ள பொதுவான பிரச்னைகளின் பட்டியலை தயார் செய்து கொண்டிருக்கிறோம்.
5 ஆண்டுகளில், அதாவது முதலாம் ஆண்டு.. இரண்டாம் ஆண்டு.. என்று ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிட்டு வருகிறோம். கோவை சாலை பணிகளுக்காக முதல்வர் முதல்கட்டமாக ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளார். வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடந்தது.
வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று வித்தியாசத்துடன் முதல்வர் மக்களை அணுகவில்லை. மற்ற மாவட்டங்களைவிட கோவைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கோவை அதிமுகவின் கோட்டை என்று மக்கள் சொல்லவில்லை. அதிமுகவுக்கு சாதகமான சிலர்தான் அப்படி கூறி வந்தனர்.
தேர்தல் வெற்றி இது யாருடைய கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. மக்கள் யாருக்கு வெற்றியை கொடுத்துள்ளனர். இனி கோவை எப்போதும் முதல்வரின் கோட்டை. வரக்கூடிய தேர்தல்களிலும் அதைப் பார்ப்பீர்கள்” என்றார்.