புதுடெல்லி: பணியாளர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்டு நிறுவ னங்களின் பங்களிப்போடு செலுத்தப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) திட்டத்தில் மாதத் தவணை செலுத்தத் தவறினால் அதற்கு தொழில் நிறுவனங்கள்தான் பொறுப்பு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாதத் தவணை செலுத்தத் தவறுவது மற்றும் தாமதமாக செலுத்துவது உள்ளிட்டவற்றுக்கு நிறுவனங்களே பொறுப்பு என்றுநீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அபய் எஸ் ஓகா ஆகியோரடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
நிறுவனம் செலுத்த வேண்டிய அபராதத் தொகை ரூ.85,548 மற்றும் அத்துடன் செலுத்த வேண்டிய ரூ.74,288 தொகையை எதிர்த்து நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கில் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர். ஒரு முறை தவணை செலுத்தத் தவறினால் அதை ஏற்க முடியும்.
இது தொடரும் பட்சத்தில் அதற்கு நிறுவனம்தான் பொறுப்பு. எனவே அதற்குரிய இழப்பீட்டை இபிஎப் நிதியத்தில் செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
1952-ம் ஆண்டு இபிஎப் சட்ட பிரிவு 14பி பிரிவின்கீழ் தவணை செலுத்தத் தவறுவது கிரிமினல் குற்றமாகாது. ஆனால் இது மிகவும் அத்தியாவசியமான செயல்பாடு. எனவே நிறுவனங்கள் தங்களுக்குள்ள பொறுப்பை உணர்ந்து தவணைத் தொகையை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிப்பதில் தவறில்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
– பிடிஐ