தரம்சாலா:
இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி தரம்சாலாவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பதும் நிசங்கா 75 ரன்கள் குவித்தார். கேப்டன் சனகா 47 ரன்களும், குணதிலக 38 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 184 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா, 17 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்த நிலையில், சஞ்சு சாம்சன் (39), ஸ்ரேயாஸ் அய்யர் (74- நாட் அவுட்), ஜடேஜா (45- நாட் அவுட்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெற வைத்தனர்.
இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 186 ரன்கள் எடுத்தது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது. இரு அணிகளுக்கிடையிலான 3வது மற்றும் கடைசி ஆட்டம் நாளை தரம்சாலாவில் நடைபெறுகிறது.