உக்ரேன் – ரஷ்யா நெருக்கடி தொடர்பில் இலங்கை நடுநிலையுடன் செயற்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ,அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை போன்ற நாட்டுக்கு ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார அல்லது வேறு தடைகளை விதிக்கும் ஆற்றல் இல்லை என்று குறிப்பிட்டார்.
உக்ரேனில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் கூடுதலான அவதானத்துடன் அரசாங்கம் செயல்பட்டு வருதாக அவர் கூறினார்.
இதேபோன்று தற்பொழுது கல்வி கற்கும் இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் செயலாளர் தெரிவித்தார்.
தற்போதைய நிலைமைக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படகூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உக்ரேனில் 65 இலங்கையர்கள் இருக்கின்றனர். இவர்களில் 14 பேர் மாணவர்கள் இவர்களுள் 8 பேர் தற்பொழுது அங்கிருந்து வெளியேறியுள்ளனர். மேலும் இருவர் எதிர்வரும் திங்கட்கிழமை அங்கிருந்து வெளியேறுவதற்கு தயாராகவுள்ளனர். விமான சேவை பிரச்சினை காரணமாக இவர்களுக்கு இதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஏனைய 4 மாணவர்கள் உக்ரேனில் தங்கியிருப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் தவிர்ந்த ஏனைய 58 பேர் நீண்ட காலமாக உக்ரேனில் வாழ்ந்து வருகின்றனர். உக்ரேனில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக அங்குள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உக்ரேன் தலைநகராக கிவ், அமைவாக துருக்கியில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு இதுதொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
இதேவேளை உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய ஜனாதிபதி புடின் நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து நேற்று காலை முதல் போர் தொடங்கியது. இந்த போரில் உக்ரைனில் உள்ள ராணுவ நிலைகள், விமான தளங்கள், ராணுவ கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன என்று வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.