புதுடெல்லி: உக்ரைனில் இந்திய மாணவர்கள் தவிப்பு, ஐ.நா-வில் இந்தியா எடுத்த முடிவு குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. ரஷ்யா – உக்ரைன் எல்லையில் இன்று மூன்றாவது நாளாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் தரப்பில் 250க்கும் மேற்பட்டோரும், ரஷ்யா தரப்பில் 1,000க்கும் மேற்பட்ட வீரர்களும், பொதுமக்களும் பலியாகி உள்ளனர். நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருவதால், மக்கள் குடும்பம் குடும்பமாக தலைநகர் கீவில் இருந்து வெளியேறி வருகின்றனர். இதற்கிடையே உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அண்டை நாடுகள் வழியாக வெளியேற்றும் பணியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது. ஏர் இந்தியா விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வர ஹங்கேரி மற்றும் ருமேனியாவுக்கு விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை இரவு) நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ரஷிய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி பேசினார். அவரிடம் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், உக்ரைனிலுள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறுவது குறித்தும் வலியுறுத்தினார். இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று மீண்டும் கூடியது. இந்தக் கூட்டத்துக்கு பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர், நிதித் துறை அமைச்சர்களுக்கு அப்பாற்பட்டு பாதுகாப்புத் துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். இதுகுறித்து பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், ‘பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது எல்ஐசி நிறுவனத்தின் முதலீட்டை எளிதாக்கும் நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஜம்மு மற்றும் நகருக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை கொண்டு வருதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருதல், ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நாவில் கொண்டு தீர்மானத்தை புறக்கணித்தது, சர்வதேச நாடுகளின் உறவுகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.