கீவ்:
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரை ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது.
இதற்கிடையில், நேட்டோ நாடுகளால் நேரடியாக உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்க முடியாத நிலையில், உக்ரைனுக்கு சில ஐரோப்பிய நாடுகள் உதவிகளை செய்து வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடனுதவி வழங்கியுள்ளது.
இந்நிலையில், நட்பு நாடுகளிடமிருந்து ஆயுதங்கள் வந்துகொண்டிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையுடடன் ஒரு புதிய நாள் தொடங்கி உள்ளது. நமது நட்பு நாடுகளிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் உக்ரைனுக்கு வந்துகொண்டிருக்கின்றன. போருக்கு எதிரான கூட்டணி வேலை செய்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
போலந்து, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி வருவதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற அமைப்புகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாகவும் டெல்லியில், இந்தியாவுக்கான போலந்து தூதர் ஆடம் புராகோவ்ஸ்கி தெரிவித்தார். ரஷியாவுக்கு எதிராக போராடும் உக்ரைனுக்கு நட்பு நாடுகள் ஆயுதங்களை வழங்குவதால் போர் இன்னும் தீவிரமடையலாம்.