புதுடெல்லி:
உக்ரைன் நாட்டில் இந்திய மாணவர்கள் பலர் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உயர்படிப்புகள் படித்து வருகிறார்கள். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இருப்பதை தொடர்ந்து அவர்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
உக்ரைனில் வசிக்கும் இந்திய மாணவர்களை உடனடியாக தாய்நாடு அழைத்து வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக நேற்று முன்தினம் ஒரு விமானம் உக்ரைன் புறப்பட்டது. ஆனால் உக்ரைன் வான்வெளி மூடப்பட்டதால் அந்த விமானம் மீண்டும் இந்தியா திரும்பிவிட்டது.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, படையெடுப்பை தொடர்ந்து பாதுகாப்புக்கான மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இதில் உக்ரைன் மீதான போரை தொடர்ந்து பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம், அதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பிரதமர் மோடி பேசினார். அப்போது உடனடியாக போரை நிறுத்துமாறு வலியுறுத்தியதுடன், உக்ரைனில் தங்கியிருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பான வெளியேற்றத்துக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், பாதுகாப்புக்கான மத்திய மந்திரிகள் குழுவுடன் பிரதமர் மோடி இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படியுங்கள்…காங்கிரஸ் அல்லாத அரசுகள் உ.பி.யை இந்த நிலையில்தான் வைத்திருந்தன- ராகுல் காந்தி விளாசல்