உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களை ஆதரித்து சிறப்பு ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த புடின் ரஷ்ய ராணுவத்தை உக்ரைனில் களமிறக்கினார்.
மூன்றாவது நாளாக தொடரும் இந்த சிறப்பு நடவடிக்கை எதற்காக எடுக்கப்பட்டது என்பதே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
டொனேட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாண மக்களை உக்ரைன் ராணுவதத்திடம் இருந்து காப்பற்றப்போவதாக கூறிய ரஷ்யா தனது ராணுவத்தை இவ்விரு மாகாணங்களை தாண்டி உக்ரைன் முழுவதும் தரையிறக்கியது.
ராணுவ நிலைகளை நிலைகுலையைச் செய்ததை அடுத்து உக்ரைன் தலைநகர் கிவ் நோக்கி முன்னேறி வரும் ரஷ்ய படை ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடைந்தால் மட்டுமே போர் நிறுத்தம் என்று அறிவித்தது.
ரஷ்யா-வின் இந்த மூர்க்கத்தனமான தாக்குதலை நிறுத்த அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ நாடுகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து ரஷ்யா மீது வர்த்தகம் மற்றும் பொருளாதார தடை தவிர ரஷ்யா உடனான விமானப் போக்குவரத்திலும் கட்டுப்பாடுகள் விதித்தது.
மேற்கத்திய நாடுகளின் இந்த தடைகள் குறித்து சிறிதும் கவலைப்படாத புடின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தூக்கியெறியும் வரை ஓயப்போவதில்லை என்று கிவ் நகரை முற்றுகையிட்டு வருகிறார்.
டொனேட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாண மக்களுக்காக களமிறங்குவதாக கூறிய புடினின் இந்த நடவடிக்கை இலக்கே இல்லாமல் செயல்பட்டு வருவதை உணர்த்துவதாக உள்ளது. மேலும் மேற்கத்திய நாடுகளுடனான உறவில் மிகப் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளதால் ரஷ்யாவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்றே கணிக்க முடியாத நிலை உள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி-யும் ஆயுதங்களை கீழே போடமாட்டோம் என்று கூறியுள்ளார். இந்த நிலையில், ஸ்வீடன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளை வழங்க முன்வந்திருப்பதை அடுத்து போர் மேலும் தொடரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஐ.நா.வின் தலையீடும் பலனளிக்கவில்லை என்ற நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு கட்டுப்பாட்டை இழந்து நிற்பதாகவே வல்லுநர்கள் கருதுகிறார்கள்.