உடன்குடி அனல் மின் நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையக்கப்படுத்தும் பணிகளை அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல்மின் நிலைய 2 மற்றும் 3-ஆம் நிலை விரிவாக்கத் திட்டப் பணிகளுக்காக நிலங்களை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தொழிற்சாலைகள், நெடுஞ்சாலைகள், அணு – அனல்மின் நிலையங்கள் அமைப்பதற்காக அடுத்தடுத்து ஏழை மக்களின் வேளாண் நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரிக்கும் அதிகார அத்துமீறல்கள் தொடர்ந்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பழைய நிலக்கரி அனல்மின் நிலையங்கள் கடந்த பல ஆண்டுகளாக மொத்த உற்பத்தித் திறனிலிருந்து 60 விழுக்காட்டிற்கும் குறைவான உற்பத்தித் திறனிலேயே இயங்கி வருகின்றன. இதனால் ஒரு அலகு மின்சாரம் உற்பத்திக்கான செலவு மிகவும் அதிகமாகி பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதோடு, காற்று மாசுபடுவதும் அதிகமாகி சுற்றுச்சூழலையும் பெருமளவு பாதிக்கிறது.
மேலும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் 2015ஆம் ஆண்டு கொண்டுவந்த மாசு தடுப்பு விதிகளை, 2022ஆம் ஆண்டுக்குள் இவ்வகை மின் உலைகளில் முழுமையாகச் செயல்படுத்த வேண்டிய நெருக்கடியும் உள்ளது. இதற்காகப் பல்லாயிரம் கோடி செலவில், மாசினைக் குறைக்க Flue Gas Desulfurization (FGD) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை நிறுவ வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.
பழைய அனல் மின்நிலையங்களில் இந்த ஆண்டிற்குள் காற்று மாசுபாடு தடுப்பு விதிகளை முழுமையாகப் பின்பற்றவோ அதனைத் தொடரவோ முடியாது என்பதால், இப்பணிகளுக்காகப் பல்லாயிரம் கோடி ரூபாய்களைச் செலவிடுவதற்குப் பதிலாக, அவற்றை நிரந்தரமாக மூடுவதே பொருளாதார மற்றும் சூழலியல் அடிப்படையில் நன்மையுடையதாக இருக்கும் என்பதே எதார்த்த உண்மையாகும்.
உடன்குடி அனல் மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டால் கடன்சுமை 20,000 கோடி ரூபாய் வரை அதிகரித்து, தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை மேலும் மோசமடையக்கூடும். இதனால் ஏற்கனவே ஒரு இலட்சம் கோடி ரூபாய் அளவிற்குக் கடனில் தத்தளிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம், கூடுதல் கடன் சுமையை ஈடுகட்ட, நுகர்வோருக்கான மின் கட்டணத்தை உயர்த்தி, அப்பாவி மக்களை வாட்டி வதைக்கும் கொடுஞ்சூழலும் ஏற்படும்.
எனவே நிலக்கரி அனல்மின் நிலையத் திட்டங்களைத் தொடர்வதற்குப் பதிலாக மின்கல சேமிப்புடன் கூடிய பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் ஈடுபட்டால், 2024ஆம் ஆண்டு முதல் 2030ஆம் ஆண்டு வரையிலான ஆறு ஆண்டுக் காலத்தில் தமிழ்நாடு அரசால் 15,000 முதல் 20,000 கோடி ரூபாய்வரை மிச்சப்படுத்த முடியும் என க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் (Climate Risk Horizons) எனும் சூழலியல் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட “White Elephants – New Coal Plants Threaten Tamil Nadu’s Financial Recovery” என்ற தனது ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலக்கரி அனல்மின் நிலையங்களிலிருந்து உற்பத்தியாகும் ஒரு அலகு மின்சாரத்தை விட (ரூ.6முதல் ரூ.8வரை), மின்கல சேமிப்பகத்துடன் கூடிய பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க மின்சாரம் (ரூ.3முதல் ரூ.5வரை) குறைவான விலையில் கிடைக்கிறது. எதிர்காலத்தில் இவ்வகையான மின் உற்பத்தி அதிகரிக்கும்போது விலை மேலும் குறையக்கூடும் என்பதால் அரசு பல்லாயிரம் கோடிகளைச் சேமிக்கவும் வழியேற்படும்.
ஆகவே, அனைத்து உயிர்களுக்குமான, பாதுகாப்பான நல்வாழ்விற்குரிய வசிப்பிடமாக, நம்முடைய தாய்நிலத்தை வருங்காலத் தலைமுறைக்குக் கையளிக்க வேண்டுமெனில், சுற்றுச்சூழலைப் பாதித்துப் பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய அணு, அனல் மின்நிலையங்கள் அமைப்பதை தமிழ்நாடு அரசு இனி முற்றுமுழுதாகத் தவிர்க்க வேண்டும்.
மேலும், மண்ணின் வளத்திற்கும், மக்களின் நலத்திற்கும் எவ்வித தீங்கும் ஏற்படுத்தாத, சூரிய ஒளி, காற்றாலை, கடலலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மாற்று மின் உற்பத்தியில் பெருமளவு முதலீடு செய்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
அதுமட்டுமின்றி, தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் என்ற பெயரில் அந்நிய பெருமுதலாளிகளின் தொழிற்சாலைகளுக்காக, ஏழை மக்களிடமிருந்து வேளாண் நிலங்களைப் பறித்து, விவசாயத்தை அழித்தொழிக்கும் கொடுங்கோன்மையை இனியும் தொடரக்கூடாது எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.