சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய அளவில் நடைபெற்ற உடல் ஆரோக்கியம் சார்ந்த சவால் போட்டிகளில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முதலிடம் பிடித்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சிங்கார சென்னை 2.o திட்டத்தின் கீழ் உடற்பயிற்சி, நடைபயிற்சி மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற பொதுமக்களின் உடல் ஆரோக்கியம் சார்ந்த பயிற்சிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சிங்கார சென்னை 2.0 வீதி விழா என்ற நிகழ்வின் கீழ் பல்வேறு வகையான போட்டிகளை நடத்தி பொதுமக்களை பங்கேற்க கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வரை அழைப்பு விடுக்கப்பட்டது.
மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் சார்பில் இந்திய அளவில் இத்தகைய போட்டிகள் அறிவித்து நடத்தப்பட்டது.
75ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக உடல் ஆரோக்கியம் சார்ந்த போட்டிகளில் இந்திய அளவில் 75 நகரங்களை சார்ந்த தலைவர்கள், பல்வேறு நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர்கள், ஆணையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதில் இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்த நபர்களின் நடைபயிற்சி, ஓடுதல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற நிகழ்வுகள் இணையத்தின் வழியே கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளன.
நடைபயிற்சி, ஓடுதல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற நிகழ்வுகளில் 75 நகரங்களில் உள்ள முக்கிய தலைவர்களில் 297 தலைவர்களும், பல்வேறு நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர்கள் மற்றும் அரசு ஆணையாளர்கள் 56 நபர்களும் பதிவு செய்தனர்.
நடைபயிற்சி, ஓடுதல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் ஆகிய சவால் போட்டிகளில் மாண்புமிகு தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
திரு.மா. சுப்பிரமணியன் அவர்கள் பதிவுசெய்து நகரங்களில் உள்ள அமைச்சர்கள், முதன்மை செயல் அலுவலர்கள் மற்றும் ஆணையாளர்களுக்கான நிகழ்வுகளில் ஓடுதல் சவால் போட்டியில் அதிக எண்ணிக்கையிலான செயல்பாடுகளில் 390 கி.மீ. ஓடி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
நகரங்களில் உள்ள அமைச்சர்கள், முதன்மை செயல் அலுவலர்கள் மற்றும் ஆணையாளர்களுக்கான நிகழ்வுகளில் நடைபயிற்சி சவால் போட்டியில் அதிக எண்ணிக்கையிலான செயல்பாடுகளில் அரசு முதன்மைச் செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் ஐந்தாம் இடத்தை பிடித்து உள்ளார்.
சென்னை மாநகரைப் பொறுத்தவரையில் மிதிவண்டி ஓட்டுதல் சவாலில் அதிக அளவு கிலோ மீட்டர் அதாவது 72,458 கிலோ மீட்டர் பதிவுசெய்து கலந்துகொண்ட நகரங்களிலேயே முதன்மையான இடத்தையும், மிதிவண்டி ஓட்டுதல் சவாலில் பதிவு செய்தவர்களின் பட்டியலில் 1,059 நபர்கள் பதிவு செய்து அதிலும் முதன்மையான இடத்தை சென்னை மாநகரம் பெற்றுள்ளது.
மேலும் நடைப்பயிற்சி சவாலில் அதிக கிலோமீட்டர் பதிவுசெய்த நகரங்களின் பட்டியலில் சென்னை மாநகரம் 21,860 கிலோ மீட்டர் பதிவுசெய்து இரண்டாமிடத்தையும், ஓடுதல் சவாலில் 403 கிலோ மீட்டர் பதிவுசெய்து இரண்டாமிடத்தையும், நடைபயிற்சி சவாலில் பதிவு செய்தவர்களின் பட்டியலில் 493 நபர்கள் பதிவு செய்து சென்னை மாநகரம் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சிங்காரச் சென்னை 2.o திட்டத்தில் நலமிகு சென்னை என்ற செயல்பாட்டின் அடிப்படையில் பொதுமக்களின் உடல் ஆரோக்கியம் சார்ந்து பல்வேறுவிதமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சென்னை வீதி விழா நிகழ்ச்சியின் மூலம் உடல் ஆரோக்கியம் சார்ந்த நடைபயிற்சி, ஓடுதல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் ஆகிய சவால் போட்டிகளில் தங்களுடைய பங்களிப்பினை அளித்து சென்னை மாநகருக்கு பெருமை சேர்த்த அனைவருக்கும் அரசு முதன்மைச் செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.