ஜெனீவா: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய உக்ரைன் தூதர் செர்கி கிஸ்லிட்ஸியா, ரஷ்யாவை சரமாரியாக விமர்சித்தார்.
ரஷ்ய தூதர் நெபன்ஸியாவை நோக்கி, “இதே அரங்கில் எத்தனை முறை படையெடுப்பு இருக்காது என்று பேசியிருப்பீர்கள். ஆனால், இன்று நாஜிப் படைகள் போல் தாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் வார்த்தைகள் மதிப்பற்றவை. நியூயார்க்கில் கிடைக்கும் ப்ரெட்ஸெல் இனிப்பில் இருக்கும் ஓட்டையைவிடவும் மதிப்பற்றது. எங்கள் நாட்டில் நிறைய பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்காக இந்த அரங்கம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டுகிறேன்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கான ரஷ்ய தூதர் நெபன்ஸியா, “டான்பாஸில் இறந்த எங்கள் மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்” என்றார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து ஆஸ்திரேலியா, எஸ்டோனியா, ஃபின்லாந்து, ஜார்ஜியா, ஜெர்மனி, இத்தாலி, லீசெஸ்டைன், லக்ஸம்பெர்க், நியூசிலாந்து, நார்வே, போலந்து, ருமேனியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வாக்களித்தன. ரஷ்ய படைகள் உடனடியாக நிபந்தனையின்றி திரும்ப வேண்டும் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 15 உறுப்பினர்கள் கொண்ட இந்த பாதுகாப்பு கவுன்சிலில் 11 உறுப்பினர்கள் ஆதரவளிக்க சீனா, இந்தியா, யுஏஇ ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை.
ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்தத் தீர்மானத்தை நிராகரிக்க, உக்ரைன் தூதர் கிஸ்லிட்ஸியா, ”பாதுகாப்பு கவுன்சிலின் சட்டத் திட்டங்களுக்கு புறம்பாக, தங்கள் நாட்டுப் பிரச்சினை மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது கவுன்சிலின் தலையில் ரஷ்யா இருந்துள்ளது” என்றார்.
உக்ரைனின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ரஷ்ய தூதர் நெபன்ஸியா, “கிழக்கு உக்ரைனில் உள்ள மக்களுக்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். மேற்கத்திய நாடுகள் கிழக்கு உக்ரைனை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. 8 ஆண்டுகளாக இந்தப் புறக்கணிப்பு நீள்கிறது” என்றார்.
மேலும், ”மேற்கத்திய நாடுகள் தங்களின் அரசியல் விளையாட்டில் ஒரு பகடைக்காயாக உக்ரைனைப் பயன்படுத்துகின்றன. மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை. இந்தத் தீர்மானம் கூட உக்ரைன் எனும் சதுரங்க போர்டில் இரக்கமற்ற ஒரு நகர்வுதான்” என்று கூறினார்.