எந்தெந்த தமிழ் மற்றும் இந்தியப் படங்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டன?

இயற்கை வளங்கள் நிறைந்த உள்ளூரில் என்னதான் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டாலும், படத்தின் ஒரு பாடலையாவது வெளிநாடுகளில் படம் பிடிக்க நமது ஊர் இயக்குநர்கள் சென்று விடுவது வழக்கம். திரையில் வெளிநாடுகளின் இயற்கை அழகை கண்டுக்களிப்பதில், நமக்கும் விருப்பம் இருக்கவே செய்கின்றன. அந்தவகையில் இயற்கை வளங்கள் நிறைந்த உக்ரைனில், தமிழ் உள்பட சில இந்தியப் படங்களின் பாடல்கள் படம்பிடிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆக்ரோஷமாக அங்கு போர் நடந்து வரும் நிலையில், இதுபோன்ற தகவல்கள் தேவைதானா என்று கூட நமக்கு தோன்றும். எனினும், பாடல்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்ட அவ்வளவு அழகான வளங்கள் உள்ள நாடு அழியக்கூடாதே என்பதுதான் நமது நோக்கமும். விரைவில் இந்தப் போர் முடிவுக்கு வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும். தற்போது உக்ரைனில் படம் பிடிக்கப்பட்ட பாடல்கள் குறித்த சிறு தொகுப்பை இங்கு காணலாம்.

1. வின்னர் (தெலுங்கு)

கோபிசந்த் மலினேனி இயக்கத்தில், சாய் தரம் தேஜ், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் நடித்து, கடந்த 2017-ம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படம் ‘வின்னர்’. இந்தப்படத்தின் மூன்று பாடல்கள் கீவ், லிவிவ் மற்றும் இஸ்தான்புல் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் உள்ள பல அழகான இடங்கள் படத்தில் காட்டப்பட்டன. உக்ரைனில் படமாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் இது என்று இந்தப் படத்தின் இயக்குநர் கூறியிருந்தார்.

image

2. சாமி 2 (சாமி ஸ்கொயர் – தமிழ்)

கடந்த 2018 – ம் ஆண்டு விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், ஹரி இயக்கத்தில் வெளியானப் படம் ’சாமி 2’ (சாமி ஸ்கொயர்). கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக, இந்தப் படம் வெளியானது. தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையத்திருந்தார். இந்தப் படத்தில் வரும் “புது மெட்ரோ ரயில்” பாடல் உக்ரைனில் கீவில் படம் பிடிக்கப்பட்டது.

image

3. 2.0 (தமிழ்)

ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் நடித்து, கடந்த 2018-ம் ஆண்டு வெளியானப் படம் ‘2.0’. இந்தப் படத்தின் “ரோஜா காதல்” என்ற பாடல் உக்ரைனில் படமாக்கப்பட்டது. பின்னர் சில கிராஃபிக்ஸ் பணிகளும் அந்தப் பாடலில் இடம்பெற்றிருந்தது.

image

4. தேவ் (தமிழ்)

ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடித்த தமிழ் திரைப்படம் ‘தேவ்’. இந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. படத்தின் அதிகபட்ச காட்சிகள் உக்ரைனில் படமாக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர ஆல்-ரவுண்டருமான கபில்தேவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இதுவாகும்.

image

5. 99 சாங்ஸ் (பான் இந்தியா)

ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி, தயாரித்த ‘99 சாங்ஸ்’ படம், கடந்த 2019-ல் பூசன் சர்வதேச பிலிம் பெஸ்டிவலில் திரையிடப்பட்டது. அதன்பிறகு கடந்த வருடம், இந்தப் படம் இந்தியாவில் வெளியாகியது. ‘99 சாங்ஸ்’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள், உக்ரைனில் நடந்தது. இதில் எஹான் பட், எடில்சி வர்காஸ், ஆதித்யா சீல், லிசா ரே மற்றும் மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்திருந்தனர்.

image

6. ஆர்ஆர்ஆர் (பான் இந்தியா)

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்ஆர்ஆர்’. இந்தப் படம் அடுத்த மாதம் 25-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. உக்ரைனில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பும் ‘நட்பு’ பாடலும், உக்ரைனில் படம் பிடிக்கப்பட்டது.

image

இதுமட்டுமின்றி கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் உக்ரைனில் பிடம்பிடிக்க திட்டமிட்ருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.