நியூயார்க்-உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை கண்டித்தும், உடனடியாக படைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது.
ரஷ்யா தன், ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தியதால், ஓட்டெடுப்பு தோல்வியடைந்தது. இந்தியா, சீனா, யு.ஏ.இ., ஆகியவை ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தன.அண்டை நாடுகளான ரஷ்யா – உக்ரைன் இடையே, நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில், அதன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனுக்குள் புகுந்து, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், படைகளை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அமெரிக்கா மற்றும் அல்பேனியா முன்மொழிந்த இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது.தீர்மானத்துக்கு ஆதரவாக 11 நாடுகள் ஓட்டளித்தன. இந்தியா, சீனா மற்றும் யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.அதே நேரத்தில் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரும், இந்த மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நாடுமான ரஷ்யா, தனக்குள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, இந்தத் தீர்மானம் தோல்வியடைந்தது.’இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். என்றாலும், உலக அரங்கில் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை தீர்மானம் உணர்த்துகிறது’ என, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறியுள்ளன.
இதைத் தொடர்ந்து, 193 நாடுகள் இடம் பெற்றுள்ள ஐ.நா., பொது சபையில், ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. அங்கு, வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த முடியாது.அதே நேரத்தில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் எடுக்கப்படும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், பொது சபையில் நிறைவேற்றப்படும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டிய கட்டாயமில்லை.
முன்னதாக, தீர்மானத்துக்கு ஆதரவு கேட்டு, உறுப்பு நாடுகளிடம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் துாதர்கள் பேச்சு நடத்தினர். தீர்மானத்தில் இருந்த கடுமையான வாசகங்கள் நீக்கப்பட்டு, திருத்தம் செய்யப்பட்டன. முதலில், ரஷ்யாவின் நடவடிக்கையை ‘கண்டிப்பதாக’ என இருந்தது. பின் அது, ‘வருத்தம் அளிக்கிறது’ என மாற்றப்பட்டது.
இதனால், ஓட்டெடுப்பு நடத்துவதற்கு, இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.’ரஷ்யாவின் அத்துமீறலை எதிர்த்து, போரை நிறுத்த வலியுறுத்தும் தீர்மானத்துக்கு அனைத்து நாடுகளும் ஆதரவு தர வேண்டும். ‘உங்களுடைய நாட்டு மக்களின் பாதுகாப்பை மனதில் வைத்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்’ என, ஐ.நா.,வுக்கான உக்ரைன் துாதர் செர்ஜி கிஸ்லிட்சியா கூறினார்.ஓட்டெடுப்புக்கு முன்ன தாக, உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கூட்ட அரங்குக்கு வெளியே, உக்ரைன் தேசியக் கொடி அருகே, அந்த நாட்டின் துாதருடன், ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 27 நாடுளின் துாதர்கள் சந்தித்து பேசினர்.
இந்தியா பங்கேற்காதது ஏன்?
ரஷ்யாவுக்கு எதிரான இந்த தீர்மானத்தின் மீது, இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இந்தியா – ரஷ்யா இடையே, நீண்ட கால ராணுவ உறவு உள்ளது. அதுபோல, அமெரிக்காவுடனும் இந்தியா நல்ல நட்பில் உள்ளது. அதனால், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா முன்மொழியும் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்குமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், இந்த விவகாரத்தில் துவக்கத்தில் இருந்தே இந்தியா எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ‘பேச்சு மூலம் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும்’ என, ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி கருத்து தெரிவித்திருந்தார்.இந்நிலையில், பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. இது குறித்து, திருமூர்த்தி கூறியுள்ளதாவது:உக்ரைனில் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் கவலை அளிப்பதாக உள்ளன.
அங்கு நடைபெறும் வன்முறைகள், பகைமைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எவ்வளவு சிக்கலான பிரச்னையாக இருந்தாலும், பேச்சு மூலமே தீர்வு காணப்பட வேண்டும். துாதரக ரீதியிலான பேச்சு என்ற முறை கைவிடப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.இரு நாடுகளும் மீண்டும் பேச்சு நடத்த வேண்டும்; அதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். இது போன்ற காரணங்களால் தான், ஓட்டெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.’வீட்டோ’ அதிகாரம்?ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்புரிமை தான், ‘வீட்டோ’ என அழைக்கப்படுகிறது.
வீட்டோ என்ற லத்தீன் மொழிச் சொல்லுக்கு, தடை செய்தல் அல்லது தடுத்து நிறுத்துதல் என அர்த்தம். நிரந்தர உறுப்பு நாடுகள் தங்களுக்கு உள்ள இந்த சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, பிற நாடுகளால் பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்படும் தீர்மானங்களை தடுத்து நிறுத்த முடியும் அல்லது தோல்வி அடையச் செய்ய முடியும். இந்த தீர்மானங்களுக்கு பெரும்பான்மை உறுப்பு நாடுகளின் ஆதரவு இருந்தாலும், வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, நிரந்தர உறுப்பு நாடுகள், அதை தடுத்து நிறுத்த முடியும். தற்போது இந்த சிறப்பு உரிமையைத் தான் ரஷ்யா பயன்படுத்தி உள்ளது.
இதற்கு முன், இந்த வீட்டோ அதிகாரத்தை ரஷ்யா 120; அமெரிக்கா 82; பிரிட்டன் 29 முறை பயன்படுத்தி உள்ளன.தீர்மானம் கூறுவது என்ன?தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:உக்ரைனின் சுதந்திரம், ஒற்றுமை, இறையாண்மை, எல்லைப் பகுதிகள், நிலப்பரப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். இந்த வகையில், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு, பாதுகாப்பு கவுன்சில் மிகவும் வலுவான வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது
.ஐ.நா.,வின் உறுப்பு நாடான உக்ரைனில் இருந்து, ரஷ்யா தன் படைகளை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும். அதன் படைகள் எந்த வகையிலும் அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது.உக்ரைனின் கிழக்கே, பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு தன்னாட்சி அளிக்கும் அறிவிப்பையும் ரஷ்யா திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.