திருவனந்தபுரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக கணவனை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்க வைத்த பெண் பஞ்சாயத்து உறுப்பினர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டன்மேடு பகுதியை சேர்ந்தவர் சுனில் வர்கீஸ் (38). இவரது மனைவி சவுமியா (33). இவர் வண்டன்மேடு பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவருடன் சவுமியாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. வினோத் துபாயில் பணிபுரிகிறார். அவர் துபாயிலிருந்து அடிக்கடி ஊருக்கு வந்து சவுமியாவை சந்தித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். இதற்கு சுனில் வர்கீஸ் தடையாக இருப்பார் என்பதால் அவரைக் கொல்ல முடிவு செய்தனர்.ஆனால், போலீசில் சிக்கி விடுவோம் என பயந்து அந்த திட்டத்தை அவர்கள் கைவிட்டனர். பிறகு சுனிலை போதைப் பொருள் வழக்கில் சிக்க வைக்கலாம் என இருவரும் தீர்மானித்தனர். இதையடுத்து, வினோத் தன்னுடைய நண்பரான ஷாநவாஸ் என்பவரிடம் விவரத்தை கூறினார். அவர் கொச்சியில் உள்ள ஒரு போதைப் பொருள் கும்பலிடம் ரூ.45,000க்கு எம்டிஎம்ஏ என்ற போதைப் பொருள் வாங்கி வினோதிடம் கொடுத்தார். வினோத் இதை வேறு ஒரு நண்பர் மூலம் சவுமியாவுக்கு கொடுத்து அனுப்பினார். அவர் அந்த போதைப் பொருளை தனது கணவனின் பைக்கில் மறைத்து வைத்துவிட்டு வினோத்துக்கு தகவல் கொடுத்தார். வினோத் தன்னுடைய நண்பர் மூலம், சுனிலின் பைக்கில் போதைப் பொருள் இருப்பதாக இடுக்கி மாவட்ட எஸ்பி. கருப்பசாமியிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படி எஸ்.பி. கருப்பசாமி வண்டன்மேடு போலீசுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வண்டன்மேடு போலீசார் சுனிலின் பைக்கை சோதனையிட்ட போது போதைப் பொருள் சிக்கியது.அவரை போலீசார் கைது செய்தனர். ஆனால், விசாரணையில் சுனில் நிரபராதி என தெரியவந்தது. அவரை போலீசார் விடுவித்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சவுமியா மற்றும் அவரது கள்ளக்காதலனின் திட்டம் தெரியவந்தது. சவுமியாவையும் அவருக்கு உடந்தையாக இருந்த ஷாநவாஸ் உட்பட 2 பேரையும் கைது செய்தனர். மேலும் துபாயில் உள்ள வினோத்தையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.