புதுடெல்லி: கரோனா தொற்று முதல் மற்றும் 2வது அலைகளின்போது 2020 மார்ச் மாதத்தில் இருந்து அக்டோபர் 2021 வரை இந்தியாவில் பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்தியாவில் கரோனாவால் இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்று பாதிப்பால் 19.2 லட்சம் குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர். உலகிலேயே கரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்து 20 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஜெர்மனியில் குறைந்த அளவாக 2,400 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளன. பெரு நாட்டில் 1000 குழந்தைகளுக்கு 8.3 என்ற அளவிலும் தென்னாப்பிரிக்காவில் 1000 குழந்தைகளுக்கு 7.2 என்ற அளவிலும் பெற்றோரை இழந்துள்ளனர். உலக அளவில் 33 லட்சம் குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளனர். இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் மருத்துவ இதழான ‘லான்செட்’ பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.