காதலிக்கு வேறு இடத்தில் நிச்சயமான ஆத்திரத்தில், காதலியுடன் எடுத்த புகைப்படத்தை, அந்தப் பெண் கொடுத்த கவிதை வசனத்தோடு களக்காடு பஜார் முழுவதும் சுவரொட்டியாக ஒட்டி பரபரப்பை கிளப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சி பிரமுகர்.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் விஜய்ரூபன். களக்காடு பகுதியில் லவ் பேர்ட்ஸ் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மேலும் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களக்காடு நகராட்சி 2வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு 18 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார். விஜய்ரூபன் தனது தூரத்து உறவினரான மேலபத்தை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணின் தந்தையிடம் திருமண செய்ய பெண் கேட்டுள்ளார். அவர் திருமணம் செய்து கொடுக்க மறுத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு அப்பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமானது. இதனை அறிந்த விஜய், அப்பெண்ணுடன் ஜோடியாக எடுத்த புகைப்படம் மற்றும் அவர் கொடுத்த கடிதம் ஆகியவற்றை போஸ்டர் அடித்து, களக்காடு நகர் பகுதி முழுவதிலும் கவிதை வசனத்தோடு சுவரொட்டியாக ஒட்டி உள்ளார். குறிப்பாக அப்பெண்ணிற்கு நிச்சயம் செய்த மாப்பிளை வீட்டின் முன்பும் சுவரொட்டியை ஓட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண்ணின் தந்தை தானியேல் களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் களக்காடு போலீசார் விசாரணை செய்து விஜயை தேடி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான விஜய் ரூபன் தற்போது தலைமறைவாகியுள்ளார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவருடைய மொபைல் எண்ணும் அனைத்து வைக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
