புதுடில்லி: பெரிய நகரங்களை தாண்டி, கிராமங்களிலும் அத்தியாவசிய சுகாதார வசதிகள் கொண்டு வரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பான கருத்தரங்கல் வீடியோ கான்பரன்சிங்கில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
சுகாதாரத்துறையுடன் சேர்த்து ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காக பட்ஜெட்டில் 3 காரணிகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நவீன உள்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தை அதிகரித்தல், ஆராய்ச்சியை ஊக்குவித்தல், நவீன தொழில்நுட்பத்தை ஏற்று கொள்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம்.
நமது குழந்தைகள் படிப்புக்காக , முக்கியமாக மருத்துவ படிப்புக்காக சிறிய நாடுகளுக்கு செல்கின்றனர். அங்கு மொழி பிரச்னை இருந்தும், அவர்கள் தொடர்ந்து செல்கின்றனர். இதனால், இந்த துறையில் தனியார் துறை பெரிய அளவில் பங்காற்ற முடியாதா ?மருத்துவ கல்லூரிகளுக்கு நிலம் ஒதுக்குவதில் சிறந்த கொள்கைகளை மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம், உலகளவில் தேவைக்கு ஏற்ப ஏராளமான டாக்டர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களை இந்தியா உருவாக்க வேண்டும். இந்தியாவை டாக்டர்கள், பல ஆண்டுகளாக தங்களது பணியின் மூலம் நாட்டின் பெருமையை உயர்த்தி உள்ளனர்.
பெரிய நகரங்களை தாண்டி, சுகாதார உள்கட்டமைப்பை ஏற்படுத்த விரும்புகிறோம். ஒரே இந்தியா, ஒரே சுகாதாரம் என்ற நோக்கத்தோடு மத்திய அரசு செயலாற்றி வருகிறது. இதனால் தொலைதூரத்தில் உள்ள மக்களுக்கும் தரமான மருத்துவ வசதி கிடைக்கும். தரமான சுகாதார உள்கட்டமைப்பு என்பது பெரிய நகரங்களில் மட்டும் இருக்கக்கூடாது. மாவட்ட அளவிலும், கிராமங்களிலும் அத்தியாவசிய சுகாதார வசதிகள் கொண்டு வரப்படும். அவற்றின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கு தனியார் துறை முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Advertisement