கோலிவுட் ஸ்பைடர்: அஜித் vs ரஜினி தீபாவளி; விஷாலின் `சுயம்வரம் 2' ஐடியா; தனுஷ் – ரஜினி சந்திப்பு?

* நெல்சன் திலீப்குமார் – ரஜினி கூட்டணியில் உருவாகும் ‘ரஜினி 169’ படத்தின் ஷூட்டிங்கை மே மாதம் துவங்கி, ஒரே மூச்சில் முடிக்கிறார்கள். படத்தை தீபாவளிக்குக் கொண்டு வருகிறார்கள். இதனிடையே ‘அஜித் 61’ அடுத்த படத்தின் படப்பிடிப்பும் மார்ச் 9-ல் துவங்கி, ஒரே ஷெட்யூலாக முடிக்க திட்டமிட்டுள்ளனர். அதையும் தீபாவளிக்கு கொண்டு வர முடிவுசெய்துள்ளனர். ஆக, இப்போதைய நிலவரப்படி வரும் தீபாவளிக்கு செம விருந்து காத்திருக்கிறது. நெல்சன் vs வினோத்!

நெல்சன் – ரஜினி

* ஹீரோ கனவுகள் இல்லாமல் முழு நேர நடிகராகிவிட்டார் மனோஜ் பாரதி. ‘ஈஸ்வரன்’, ‘மாநாடு’க்குப் பிறகு ‘விருமன்’ உள்பட சில படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். தவிர பல வருடங்களுக்கு முன் ’16 வயதினிலே’ என்ற இசை ஆல்பத்தை இசையமைத்து, இயக்கியிருந்தவர், நீண்ட வருட இடைவெளிக்கு பின் ‘காதல் ஓவியம்’ என்ற தலைப்பில் அடுத்த இசை ஆல்பத்தை ரெடி செய்திருக்கிறார். ”நடிப்பிற்கிடையே அடுத்தடுத்து மியூசிக் ஆல்பங்களுக்கும் இசையமைப்பேன். என் மியூசிக் வீடியோக்கள் அத்தனைக்கும் அப்பாவின் பட டைட்டில்களைதான் வைப்பேன்” என்கிறார். புது நெல்லு, புது நாத்து!

* ‘வலிமை’ வெளியாகும் நாளில் சீரடிக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்துள்ளார் ஹெச்.வினோத். ”வலிமையை முடிக்க இரண்டு வருடங்கள் ஆனது. இடையே லாக்டௌன், நடிகர்களுக்கு கொரோனா என படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் படத்தையே ட்ராப் செய்யுமளவிற்கு போனது. இப்படியான சூழல், இனி வரும் படத்திற்கு இருக்கக் கூடாது என்பதற்கும் சேர்த்துதான் பாபாவிடம் வேண்டுதல்” என்கிறது அவரது வட்டாரம். மனதில் ‘வலிமை’ வேண்டும்!

எஸ்.ஜே.சூர்யா – விஜய்

* ‘மெர்சல்’ கூட்டணிக்குப் பிறகு, ரொம்ப நாள் கழித்து எஸ்.ஜே.சூர்யா – விஜய் சந்திப்பு நடந்திருக்கிறது. நடந்த சந்திப்பில் அவரின் ‘மாநாடு’ நடிப்பை பற்றி அதிகம் பேசிப் பாராட்டியிருக்கிறார் விஜய். அந்தச் சந்திப்பே ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீண்டுவிட அடுத்து அவர்கள் படத்தில் இணைந்து வேலை செய்வார்களா என்ற எதிர்பார்ப்பும் எங்கே பார்த்தாலும் பரவிக்கிடக்கிறது. சூர்யாவின் வசம் ஏற்கெனவே கதைகள் நிறைய இருப்பதால் அவருக்கு இப்போது இருக்கிற சூழல்படி அவரால் கதை அமைத்துவிட முடியும் என்கிறார்கள். கோலிவுட்டில் ‘குஷி’!

* கடவுள் டைட்டிலில் படத்தை இயக்கியவர், அடுத்து வெற்றி நடிகருடன் சேர்ந்து ஒரு படத்தைத் தயாரித்து இயக்கியிருந்தார். அதன்பிறகு மியூசிக் ஹீரோவுக்கு படம் இயக்க கமிட் ஆனார். ஷூட்டிங்கும் உடனடியாக கிளம்புவதாக இருந்தது. இதற்கிடையே டைரக்டரின் முந்தைய படமும் வெளியானது. அதன் ரெஸ்பான்ஸில் ஆடிப்போன மி.ஹீரோ… படத்தைப் பார்த்துட்டு, இயக்குநரைக் கூப்பிட்டு, “நீங்க முழுக்கதையையும் சொல்லுங்க சார்… அப்புறம் ஷூட்டிங் கிளம்பிக்கலாம். அவசரப்பட வேண்டாம்” எனச் சொன்னதில் கிறுகிறுத்திருக்கிறார் இயக்கம். பொறுமையே பெருமை!

ரஜினி – தனுஷ்

* போயஸ் கார்டன் வீட்டிலிருந்து கிளம்பிய ரஜினி இப்போது கேளம்பாக்கம் பண்ணை வீட்டில்தான் இருக்கிறார். அவரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் இயக்குநர் நெல்சன் சந்தித்து கதைத் தன்மையை விளக்குகிறார். இதற்கிடையில் அவருக்கு மெல்லிய உடற்பயிற்சியை சொல்லித்தருகிறார்கள். இதற்கிடையில் தனுஷ் – ரஜினி சந்திப்பு நடக்கவேண்டும் என இருவருக்கும் வேண்டிய ஒரு தயாரிப்பாளர் முயற்சி செய்து வருகிறார். இதன் பொருட்டே இரு தரப்பும் இந்தப் பிரிவு பற்றிப் பேசாமல் இருக்கிறார்கள். எதையும் மனசுவிட்டு பேசிவிடுகிற கஸ்தூரி ராஜாவும் இதன் பொருட்டே அமைதி காக்கிறார் என்கிறார்கள். நல்லது நடக்கட்டும்!

* நடிகர் சங்கத் தேர்தல் ஓட்டுகள் எண்ணப்பட்டவுடன் அது அவருக்கு சாதகமாக வந்தால் சில முக்கிய முடிவுகளை எடுக்க யோசித்து வைத்திருக்கிறார் நடிகர் விஷால். முன்வந்த ‘சுயம்வரம்’ படம் போல எல்லா ஹீரோக்களையும் ஒன்றிணைத்து ஒரு படம் செய்ய உத்தேசமாம். அதற்கு எல்லா முக்கியமான ஹீரோக்களும் ஆறு நாள்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும் என்ற கணக்கில் திட்டம் வைத்து அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டார்கள். இதற்கு கமல் உட்பட சில நடிகர்கள் ஏற்கெனவே ஓகே சொல்லிவிட்டார்கள். இதல்லவா பிரமாண்டம்!

BB Ultimate – சிம்பு

* பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்குச் செல்வதற்கு சிம்பு முதலில் தயங்கவே செய்தார். இதற்கு முன்னால் கமல் செய்து அதற்குரிய பெரிய வரவேற்பு பெற்றுவிட்டதால், தான் அதை அப்படியே கொண்டுவந்துவிட முடியுமா என்ற சந்தேகமும் அவருக்கு வந்துவிட்டது. அதனால் அவருக்கு நெருக்கமான இயக்குநர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரிடமும் அபிப்ராயம் கேட்டு, அவர்களின் உற்சாகம் கிடைத்த பின்புதான் சரி என்று சொல்லியிருக்கிறார். நண்பர்களோடு கிட்டத்தட்ட ரிகர்சலே செய்து பார்த்து விட்டாராம். புரோமோவுக்குக் கிடைத்த வரவேற்பிலேயே சிம்பு நெகிழ்ந்துவிட்டார் என்கிறார்கள். அதே சமயம், கமல் திடீரென விலகிக் கொண்டதால் உண்டான நெருக்கடிக்கு விடையாகவே தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி வருவதாகவும், எதிர்காலத்தில் தொடர்ந்து இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க மாட்டேன் என்றும் கறாராகச் சொல்லிவிட்டாராம் சிம்பு. அப்படித்தாங்க ஆரம்பிக்கும், ஆனா ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.