புனே: மகாராஷ்டிரா மாநில போலீஸ் உளவுத்துறையின் கூடுதல் டிஜிபி. ஆக இருந்தவர் ராஷ்மி சுக்லா. அப்போது, அனுமதியின்றி பாஜ.வுககு ஆதரவாக பல போலீஸ் உயரதிகாரிகளின் போன்கள், செல்போன்களை இவர் ஒட்டு கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இது பற்றி அப்போதைய தலைமை செயலாளர் சீத்தாராம் குந்தே தலைமையிலான குழு விசாரித்து. இவருக்கு எதிராக அறிக்கை அளித்தது. அதில், ‘அச்சுறுத்தல் ஏற்பட்டால் அல்லது தேச துரோக நடவடிக்கைகள் தொடர்பாகத்தான் போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. அரசியல் காரணங்களுக்காக, ராஷ்மி சுக்லா தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்,’ என கூறியுள்ளார். இந்த சர்ச்சைக்குப் பிறகு, சிவில் பாதுகாப்பு துறையின் டிஜிபி.,யாக ராஷ்மி சுக்லா மாற்றப்பட்டார். பின்னர், ஒன்றிய அரசின் பணியை கேட்டு பெற்று சென்றார். இப்பேது, ஐதராபாத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் டிஜிபி ஆக இருக்கிறார். இந்நிலையில், உளவுத்துறையில் ராஷ்மி சுக்லா இருந்தபோது பாஜ.வுக்கு சாதகமாக செயல்பட்டதாக அமைச்சர்கள் ஜித்தேந்திர ஆவாத்தும், நவாப் மாலிக்கும் குற்றம்சாட்டினர். சில சுயேச்சை எம்எல்ஏ.க்களை சந்தித்து, சிவசேனா கூட்டணி ஆட்சியை ஆதரிக்க வேண்டாம் என்று கூறி பல கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், போன்களை ஒட்டு கேட்டது தொடர்பாக மாநில அரசின் உத்தரவுப்படி ராஷ்மி மீது புனே போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.