சென்னை: தமிழகத்தில்தான் ஆற்றல்மிக்க இளைஞர் சக்தி அதிகம். இந்தியாவில் இருக்கும் மிக முக்கியமான 100 கல்வி நிறுவனங்களில் 30-க்கும் மேற்பட்டவை தமிழ்நாட்டைச் சேர்ந்தவைதான் என்பது பெருமைப்படக்கூடிய ஒன்று என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை, கோடம்பாக்கம், மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியின் சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கத் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய முதல்வர், அந்த கல்லூரி மற்றும் கல்விக் குழுமத்தின் சிறப்புகள் மற்றும் பெருமைகள் குறித்து பட்டியலிட்டார்.
மேலும், பொறியியல் கல்வி எளிதாக கிடைக்க வேண்டும் என்கின்ற நோக்கத்திற்காகத்தான் இந்தக் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது. அதே நோக்கத்தோடுதான், மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் இடம்பெறுவதற்கு இடராக இருந்த நுழைவுத் தேர்வை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நீக்கினார் என்பதும் வரலாறு, அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
அதனால், இன்று தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பொறியாளர் இருக்கிறார் என்று சொல்கிற அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. பொறியியல் மட்டும் அல்ல, அனைத்துப் படிப்புகளும் நமது தமிழக மாணவர்களுக்கு எளிதாக கிடைக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. இப்பொழுது இருக்கக்கூடிய எனது அரசு என்று சொல்ல மாட்டேன், நமது அரசினுடைய நிலைப்பாடும்.
அதனால்தான், இன்று ஏழை எளிய, கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வி பெறுவதற்குத் தடையாக இருக்கக்கூடிய ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெற நாம் எப்படியெல்லாம் போராடிக் கொண்டிருக்கிறோம், அதுவும் சட்டப் போராட்டத்தை நடத்தக்கூடிய நிலையிலே இன்றைக்கு நாம் இருக்கிறோம்.மாணவர்கள்தான் நாட்டினுடைய மிகப்பெரிய சொத்து. எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கான கல்விக் கதவுகள் மூடப்படக் கூடாது.
தமிழகத்தில்தான் ஆற்றல்மிக்க இளைஞர் சக்தி அதிகம். இந்தியாவில் இருக்கும் மிக முக்கியமான 100 கல்வி நிறுவனங்களில் 30-க்கும் மேற்பட்டவை தமிழகத்தைச் சேர்ந்தவைதான் என்பது பெருமைப்படக்கூடிய ஒன்று. அண்மைக்காலத்தில் வெளியான ஒன்றிய அரசினுடைய தரவரிசை முடிவுகளே அதைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறது.பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், உலக ஆராய்ச்சி நிறுவனங்கள் தமிழகத்தில் இருப்பது போல எந்த மாநிலத்திலும் கிடையாது, அதுவும் தமிழகத்துக்குத்தான் பெருமை.
தமிழக இளைஞர்கள் உலகத்தின் அனைத்து நாடுகளிலும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். உயர் பொறுப்புக்களில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இளைஞர்கள் எல்லாம் தமிழகத்தின் உயர்கல்வியால் உயர்ந்தார்கள், உயர்ந்த நிலைக்குச் சென்றவர்கள், அந்த நிலையை இன்னும் கூடுதலாக நாம் உயர்த்தவேண்டும்.
ஆய்வுகள், ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் இன்னும் அதிகமாக வேண்டும். வெளிநாடுகளில் இருக்கும் புதுவிதமான படிப்புகள், பட்டங்கள் அனைத்தையும் தமிழகத்தின் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நாம் புகுத்தவேண்டும். இதை நான் கடந்த மாதம் 25-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் குறிப்பிட்டுச் சொன்னேன்.
இந்தக் கல்லூரியில் இன்றையதினம் “சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கம்” எனும் திட்டத்தை நீங்கள் உருவாக்கியிருக்கியிருக்கிறீர்கள்.
சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலே இருக்கக்கூடிய பிரிவினர் மற்றும் பல்வேறு சூழல்களால் நலிவடைந்த பெண்கள், இதையெல்லாம் மனதில் நாம் உருவாக்கிக் கொண்டு அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்து, அவர்களது வாழ்வில் உயர்வினை கொண்டு வருவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாக அமைந்திருக்கிறது.
மாணவர்கள் தாங்கள் கல்வி கற்கும் பருவத்திலேயே சமுதாயத்தில் உள்ள தேவைகளை கண்டறிந்து, தங்களது கல்லூரியில் அமைந்துள்ள ஆய்வுக்கூடம், நூலகம் மற்றும் பேராசிரியர்கள் துணை கொண்டு தங்களது கற்பனைத் திறனையும், தொழில்நுட்பத்தையும், படைப்பாற்றலையும், கண்டறிந்து செயலாக்கத்தை ஊக்குவிக்க இந்தத் திட்டம் நிச்சயம் உதவும்.
நலிவுற்ற மக்களின் தேவைகளை கண்டறிந்து நவீன தொழில்நுட்பம் மூலம் தீர்வுகாண இந்தத்திட்டம் உதவும். இந்தத்திட்டத்தின் தொடக்கமாக இக்கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய சமூகப் பயன்பாட்டிற்கான எளிமையான சிறந்த தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய, குறைந்த பொருட்செலவிலான படைப்புகளை பார்க்கும்போது இவர்கள் இதுபோல இன்னும் பல்வேறு கண்டுப்பிடிப்புகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி, எளிய மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று நான் மனந்திறந்து இந்த மாணவச் செல்வங்களை வாழ்த்துகிறேன்.
இந்தத் திட்டங்களை மக்களுடைய பயன்பாட்டிற்கு வழங்குவதில் நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன். முன்னாள் முதல்வர் கருணாநிதி இந்தக் கண்டுபிடிப்புகளைப் பார்த்திருந்தால் நிச்சயமாக அவரும் பாராட்டியிருப்பார், வாழ்த்தியிருப்பார். அவர்தான் நாட்டியிலேயே முதல்முறையாக மாற்றுத்திறனாளிக்கு என்று ஒரு தனி துறையே உருவாக்கினார். அந்தத்துறையை தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இப்பொழுது நான் அதை நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன். ஆகவே கண்ணும்கருத்துமாக அதை முன்னாள் முதல்வர் கருணாநிதி பார்த்தார்.
இதுபோன்ற கண்டுபிடிப்புகள் சிறியதாக இருந்தாலும் அவற்றின் மையமாக இருக்கும் மனிதநேயப் பண்பு பெரியது. கல்லூரி தொடங்கியுள்ள சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கத் திட்டத்தில் உறுதுணையாக இருந்த அனைத்துப் பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் மற்றும் செயலாளர் அத்தனைப் பேர்களையும் நான் இந்த நேரத்தில் வாழ்த்துகிறேன்.
“கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் நமக்கு போதாது. உயர் கல்வியில், ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டத்தை நாம் பெற்றாக வேண்டும்” என்கிற என்னுடைய விருப்பத்தை, என்னுடைய எண்ணத்தை நான் இந்த நேரத்தில் எடுத்துச்சொல்லி, அதை நோக்கி நாம் பயணிப்போம் என்று நான் உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக்கொண்டு, உங்கள் அனைவரையும் சந்திக்கக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கக்கூடிய இந்தக் கல்லூரியினுடைய நிர்வாகப் பெருமக்களுக்கு அதேநேரத்தில் இங்கே இவ்வளவு அமைதியாக, மாணவச் செல்வங்கள் என்று சொன்னால் இங்கொன்றும் அங்கொன்றுமாக சலசலப்பு, கூச்சல் எல்லாம் இருக்கும்.
ஆனால் நீங்கள் உட்கார்ந்து இருக்கக்கூடிய இந்தக் கட்டுப்பாட்டைப் பார்க்கிறபோது எவ்வளவு கண்ணியத்தோடு, எவ்வளவு கட்டுப்பாட்டோடு இந்தக் கல்லூரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் கட்டுப்பாட்டோடு இருங்கள், கடமை ஆற்றுங்கள், நிச்சயம் நமக்கு வெற்றி, வெற்றி, வெற்றி என்று கூறி விடைபெறுகிறேன்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.