தமிழகத்தில் தாமரை மலரத் தொடங்கிவிட்டதா?! – சதவிகித கணக்குகள் சொல்வதென்ன?!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்:

தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் 1,374 மாநகராட்சி கவுன்சிலர்கள், 3,843 நகராட்சி கவுன்சிலர்கள், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 12,838 இடங்களுக்கு, 57,778 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலுக்காக, தமிழகம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் பணியில் 1.33 லட்சம் அலுவலர்களும், பாதுகாப்புப் பணியில் 1.13 லட்சம் காவலர்களும் ஈடுபட்டிருந்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

கடந்த பிப்ரவரி 19-ம் தேதி வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. தமிழகம் முழுவதும் 60.70 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்ததாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் கடந்த 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்திருந்தது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த முதலே ஆளும் திமுக கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது.

தேர்தல் முடிவுகள்:

7,621 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 12 இடங்களில் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தது. 4 இடங்களில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஒரு இடத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. 196 இடங்களில் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், 4,389 இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது. அடுத்தபடியாக, அதிமுக 1,206 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் 368 இடங்களிலும், பாஜக 230 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.

திமுகவினர் வெற்றி கொண்டாட்டம்

நகராட்சி வார்டு உறுப்பினர் பதவியைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 3,843 இடங்களில், 18 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு இடத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இங்கு 2,360 இடங்களில் திமுகவும், 638 இடங்களில் அதிமுகவும், 151 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 56 இடங்களில் பாஜகவும் வெற்றிபெற்றுள்ளது. 1,374 மாநகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 4 இடங்களில் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஒரு இடத்தில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. 952 இடங்களில் திமுகவும், 164 இடங்களில் அதிமுகவும், 73 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 22 இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றிருந்தது.

மூன்றாவது பெரிய கட்சி:

வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற தினம் அன்று தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில், “தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்கிற இடத்தை பாஜக பெற்றுள்ளது. வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். கட்சியின் வலிமையைப் பார்க்கவேண்டும் என்று தான் உள்ளாட்சியில் தனித்துப் போட்டியிட்டோம். கொங்கு மண்டலத்தில் 15 சதவிகித வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. அதிமுக மிகப்பெரிய கட்சி. இந்த ஒருமுறை தோல்வியைத் தழுவியதால் அவர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது.” என்றார்.

பாஜக தலைவர் அண்ணாமலை

தொடர்ந்து பேசியவர், “ கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றதால் திமுகவின் கோட்டை என்று சொல்ல முடியாது. பாஜக அதிமுக இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருந்த கொங்கு எண்களின் கோட்டையாகவே இருக்கும். காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் டெபாசிட் கிடைக்குமா என்பதைப் பார்க்கவேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் ஆக்ஸிஜனை சுவாசித்து உயிர் வாழ்கிறது. பாஜகவை விமர்சிக்க கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தகுதியில்லை” என்று பேசியிருந்தார்.

உண்மை நிலவரம் என்ன!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5,480 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இதில் அவர்கள் வெற்றி பெற்ற இடங்கள் 308. மொத்த வெற்றி சதவிகிதத்தில், பாஜக மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 1.60 விழுக்காடும், நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 1.46 விழுக்காடும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 3.02 விழுக்காடும் பெற்றுள்ளது. இந்த தேர்தலில் கொங்கு மண்டலத்திலும் சரி தமிழகத்தில் மற்ற பல்வேறு பகுதிகளிலும் சரி, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பெற்றிருந்த வாக்குக்கும் பாஜக, அதிமுக சேர்ந்து பெற்றிருந்த வாக்குக்கும் பெரும் வித்தியாசம் இருந்தது.

மாநகராட்சி வார்டு உறுப்பினர்
நகராட்சி வார்டு உறுப்பினர்
பேரூராட்சி வார்டு உறுப்பினர்

அதே நேரத்தில், ஒரு சில வார்டுகளில் அதிமுக மற்றும் பாஜக இரண்டாம் இடத்திலிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்படியான வார்டுகள் மிகவும் சொற்பமே. பாஜகவை விடக் காங்கிரஸ் போட்டியிட்ட இடங்கள் மிகவும் குறைவே, ஆனால், காங்கிரஸ் 592 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 5.31 விழுக்காடும், நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 3.93 விழுக்காடும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 4.83 விழுக்காடும் பெற்றுள்ளது. காங்கிரஸ் திமுக கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக மாநிலத் தலைவர்

இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட பாஜக 308 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது உண்மை தான். இந்த மொத்த வெற்றி எண்ணிக்கையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பாஜக 200 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மீதமுள்ள 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பாஜக அதிமுகவுடன் இந்த தேர்தலைச் சந்தித்திருந்தால் கொங்கு அவர்களின் கோட்டையாக இருந்திருக்கும் என்று சொல்வதும் தற்போது வாங்கியிருக்கும் வாக்குகள் மூலம் சாத்தியம் இல்லை என்றே தெரியவருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.