திருச்சி: நேரு ஆதரவாளருக்கு மேயர்! – துணை மேயர் பதவிக்கு மோதும் நேரு vs அன்பில் ஆதரவாளர்கள்!

திருச்சி மாநகராட்சியின் மேயர் பதவி யாருக்கு என உறுதியாகிவிட்ட நிலையில், அமைச்சர்கள் கே.என் நேரு, அன்பில் மகேஷ் என இரு ஆளுமைகள் மையம் கொண்டுள்ள திருச்சி மாநகரின் துணை மேயர் பதவியை அலங்கரிக்கப்போவது எந்த அணியினர் என்பதற்கான கடும் போட்டியால் தமிழகமே உற்று நோக்கும் மாநகரமாக மாறியிருக்கிறது திருச்சி.

திருச்சி மாநகராட்சி

திருச்சி மத்திய மாவட்டத்தில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர் வைரமணியின் கட்டுப்பாட்டிற்குள் 27 வார்டுகளும், தெற்கு மாவட்ட தி.மு.க அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையின் கட்டுப்பாட்டிற்குள் 38 வார்டுகளும் என மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. இதில் யார் அதிக இடங்களில் வெற்றிபெற்று துணை மேயர் பதவியை பிடிக்கப்போவது என்கிற போட்டி கடுமையாக நடந்தது.

பிரசாரத்தில் நேரு தரப்பினர் அதிக இடங்களைக் கைப்பற்றிவிடக்கூடாது என்று அன்பில் மகேஷ் தரப்பினரும், அன்பில் மகேஷ் தரப்பினர் அதிக இடங்களைக் கைப்பற்றக்கூடாது என்று நேரு தரப்பினரும் உள்ளடி வேலைகளும் அனல் பறந்தனவாம். அப்படியிருந்தும் 65 வார்டுகளில் போட்டியிட்ட தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 59 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

கூட்டத்தில் பேசிய கே.என் நேரு

அதில் 49 இடங்களில் இன்று தி.மு.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருக்கிறது. இந்த நிலையில், மேயர், துணை மேயர், மற்றும் மண்டலத் தலைவர்கள் பதவியைக் கைப்பற்ற வெற்றி பெற்ற தி.மு.க வார்டு உறுப்பினர்கள் கடுமையான காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

திருச்சி மாநகராட்சியில் அதிகமாக தி.மு.க கவுன்சிலர்கள் வெற்றி பெற்றதால் தி.மு.க-வை சேர்ந்த முன்னாள் துணை மேயர் அன்பழகன்தான் இந்த முறை மேயராகிறார் என்பது உறுதியாகியுள்ளதாம். இதனால், துணை மேயர் பதவிக்குத்தான் கடும் போட்டி நிலவுகிறது. துணை மேயராக நேரு தரப்பில் முத்துசெல்வம், மண்டி சேகர், விஜயா ஜெயராஜ் ஆகியோரின் பெயர்களை முன்வைக்கிறார்.

நேரு ஆதரவாளர் அன்பழகன்

மகேஷ் தரப்பில் மதிவாணனை முன்னிறுத்துகிறார்கள். அன்பழகனுக்கு மேயர் பதவியை விட்டுக்கொடுத்ததால், அன்பில் மகேஷ் தரப்பினர் மதிவாணனை துணை மேயராக்க கடுமையாகக் காய்நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

அன்பில் மகேஷ்

ஆனால், தி.மு.க தலைமை மேயர் மற்றும் துணை மேயர் பதவியை ஒரே (முக்குலத்தோர்) சமூகத்தைச் சேர்ந்த இருவருக்கும் பதவியை கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறதாம். இதனால் மகேஷ் ஆதரவாளருக்கு துணை மேயர் பதவி கிடைக்குமா என்பதுதான் கேள்விக் குறியாக உள்ளது. சமுதாயக் கணக்கை வைத்து இதிலும் நேருதான் வெற்றி பெறப் போகிறார் என்கிறார்கள் கட்சியில் உள்விவகாரம் அறிந்தவர்கள்.

மறுபுறம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் மேயர் சுஜாதா, சோபியா விமலா ராணி, மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் ஆகிய மூன்று பேரும் துணை மேயர் பதவியைக் குறி வைத்து வந்தனர். இப்போது மூன்று பேருமே வெற்றி பெற்று விட்டதால் மூவருமே தங்கள் தலைமை மூலமாகக் காய் நகர்த்தி வருகிறார்கள்.

திருச்சி மலைக்கோட்டை

இதில் சுஜாதா துணை மேயராக வருவதை அமைச்சர் நேருவே விரும்பவில்லை என்கிறார்கள். இந்நிலையில், சுஜாதாவுக்கு ஆதரவாக பா.சிதம்பரம் ஸ்டாலினிடம் பேசியிருக்கிறாராம். இதனால் துணை மேயர் விஷயத்தில் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம் என்கிறார்கள்.

கே.என்.நேரு, அன்பில் மகேஷ்

அடுத்ததாகத் திருச்சி மாநகராட்சியைப் பொறுத்தவரை முன்பு நான்கு கோட்டங்கள் இருந்தன. இப்போது புதிதாக ஐந்தாவது கோட்டமாக ஒரு கோட்டம் உருவாகியுள்ளது. இந்த ஐந்து கோட்டங்களுக்கும் ஐந்து கோட்டத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த ஐந்து கோட்ட தலைவர் பதவிகளைக் கைப்பற்ற, இப்போதே தி.மு.க-வில் முட்டல் மோதல் ஆரம்பம் ஆகியுள்ளது! இதனால் திருச்சியை பொறுத்தவரை போட்டியே, துணை மேயருக்கு தானாம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.