திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவில் முக்கிய ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர்.
கோடை காலம் தொடங்கி உள்ளதால் திருப்பதி மலையில் நன்கு வளர்ந்துள்ள மரங்களில் உள்ள இலைகள் மற்றும் சருகுகள் காய்ந்து உள்ளன. இவை காற்றினால் உதிர்ந்து கீழே விழுந்துள்ளது.
இந்த நிலையில் திருப்பதி மலையில் காற்றாலை அமைக்கப்பட்டுள்ள வனபகுதிகளில் திடீரென தீ பற்றி எரிந்தது. மளமளவென எரிந்த தீ காட்டு பகுதி முழுவதும் பரவியது.
இதில் வனப்பகுதியில் உள்ள மரங்கள், மூலிகைச் செடிகள், கொடிகள் தீயில் கருகி நாசமானது.
இதுகுறித்து திருமலை தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களுடன் விரைந்து சென்று வனப்பகுதியில் தீ பற்றி கொண்டிருந்த இடங்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். திடீர் காட்டு தீயால் திருப்பதி பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.