சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும்489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில் 57 ஆயிரத்து 746 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது.
இத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தலில் செலவிட்ட தொகைக்கான கணக்கைமுறைப்படி உரிய படிவத்தில் பராமரிக்க வேண்டும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு பராமரிக்கப்பட்ட கணக்கின் நகலை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண் டும்.
சென்னை மாநகராட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள், மாநகராட்சி ஆணையரிடமும், இதர மாநகராட்சிகளில் போட்டியிட்டவர்கள் மாவட்ட ஆட்சியர்களிடமும், நகராட்சிகளில் போட்டியிட்டவர்கள், நகராட்சி ஆணையரிடமும், பேரூராட்சிகளில் போட்டியிட்டவர்கள், தொடர்புடைய பேரூராட்சி செயல் அலுவலரிடமும் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் தேர்தல் செலவு கணக்கு விவரத்தை உரிய அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும். பின்னர் அதற்கான ஒப்புதல் சீட்டை தொடர்புடைய அலுவலரிடமிருந்து வேட்பாளர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
3 ஆண்டுகள் போட்டியிட தடை
தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள், வருங்காலங்களில் 3 ஆண்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் ஆக்கப்படுவார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.