இயக்குநர்களின் வாரிசுகளில் மனோஜ் பாரதிராஜா முக்கியமானவர். பாரதிராஜாவின் மகன் என்றாலும், மணிரத்னத்திடம் வித்தை கற்றவர். ஹீரோ, பாடகர், இசையமைப்பாளர், இப்போது நடிப்பு கற்றுக்கொடுக்கும் மாஸ்டர் என பன்முகம் காட்டுகிறார். ‘ஈஸ்வரன்’, ‘மாநாடு’ படங்களுக்கு பிறகு ‘விருமன்’ உள்பட பல படங்களில் நடித்து வரும் மனோஜிடம் பேசினோம்.
“விகடன் பத்திரிகைகள்ல என்னோட பேட்டிகள் நிறைய வந்திருக்கு. ஆனா, முதன்முறையா விகடன் அலுவலகத்துக்கு வந்திருக்கேன். ஆபீஸ் செட்அப்பே செமையா இருக்கு…” என முகம் மலர்கிறார்.
“சினிமாவும், இசையும்தான் என் சுவாசம்னாலும், நடிகன் ஆவேன்னு நினைச்சதில்ல. ப்ளஸ் டூ முடிக்கறதுக்குள்ல படிப்பை பாதியிலேயே விட்டுட்டு சினிமாவுக்கு வந்துட்டேன். அப்பாகிட்ட ஒர்க் பண்ணலாம்னு கேட்டப்ப அவர், ‘நீ எங்கிட்ட அசிஸ்டென்டா சேர்ந்தா அப்பா – மகன் உறவுதான் மேலோங்கும். தொழில் கத்துக்க மாட்டே. அதனால வெளியே யாரையாவது சொல்லு, நான் சேர்த்து விடுறேன்’னார். உடனே மணிரத்னம்கிட்ட சேர்த்துவிடச் சொன்னேன். அடுத்தநாளே மணி சார் ஆபீஸ் போனதும் சேர்த்துக்கிட்டார். ‘பம்பாய்’தான் என் முதல் படம். மணி சார்தான் என் குரு. இடையே அமெரிக்காவில் தியேட்டர் ஆர்ட்ஸ் கோர்ஸும் முடிச்சிட்டு வந்தேன்.
’16 வயதினிலே’னு மியூசிக் ஆல்பம் ஒண்ணு பண்ணியிருந்தேன். அதுல பாடல்களை நானே கம்போஸ் செய்திருப்பேன். நடிகை மீனாவையும் ஒரு பாடல் பாட வச்சிருப்பேன். நான் ‘தாஹ்மஹால்’ல அறிமுகமானேன். அதுல பாடல்கள் அத்தனையும் எவர்க்ரீன் ஸ்வீட். நானும் ‘ஈச்சி எலுமிச்சி’ பாடலை பாடியிருப்பேன். இப்படி ஒரு படம் எனக்கு அமையறது வரப்பிரசாதம். இதுக்காக எங்க அப்பா, வைரமுத்து அங்கிள், ரஹ்மான் சார், மணிரத்னம் சார்னு இவங்களுக்கு பெரிய நன்றி சொல்றேன். முதல்படத்துல எனக்கு கேமரா மீதான பயம் போறதுக்கே ஒருவாரம் ஆச்சு.
‘தாஜ்மஹால்’ படத்துக்குப் பிறகு ‘சமுத்திரம்’, ‘கடல் பூக்கள்’, ‘அல்லி அர்ஜூனா’, ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘ஈரநிலம்’னு நிறைய படங்கள் பண்ணினேன். ‘கற்றது தமிழ்’, ‘குஷி’ இதெல்லாம் நான் நடிச்சிருக்க வேண்டிய படங்கள். இப்ப மறுபடியும் கம்பேக் மாதிரி ‘ஈஸ்வரன்’ அமைஞ்சது. தொடர்ந்து மூணு படங்கள் கைவசம் இருக்கு என்ற மனோஜின் பேச்சு ‘விருமன்’ பக்கம் தாவியது.
“கார்த்தியோட ‘விருமன்’ படப்பிடிப்பு தேனியிலதான் நடந்துச்சு. தேனி ரொம்ப பிடிச்ச ஊர். சூர்யா, கார்த்தி, ஷங்கர் பொண்ணு அதிதி மூணு பேருமே என்னோட சின்ன வயசு ஃப்ரெண்ட்ஸ். ஒண்ணா விளையாடிட்டு இருப்போம். அதைப் போல தயாரிப்பாளர் ராஜசேகர் அங்கிள் அவர் வீடும் எங்க வீட்டுக்கு எதிர்வீடு… எனக்கு நெருக்கமான தேனியில்தான் படப்பிடிப்பும் நடந்தது. அத்தனை பேரும் மறுடியும் ஒரே குடும்பமா சந்திக்கற வாய்ப்பை இந்தப் படம் வழங்குச்சு!” என புன்னகைக்கிறார் மனோஜ்.