நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள ஓவேலி, எல்லைமலைப் பகுதியைச் சேர்ந்தவர் 67 வயதான மாதன். பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், வழக்கம் போல இன்று காலை பணிக்கு கிளப்பியிருக்கிறார். அப்போது, திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவையை நாடியுள்ளனர். நீண்ட நேரம் காத்திருந்தும் 108 ஆம்புலன்ஸ் வராததால் தனியார் வாகனம் ஒன்றை வாடகைக்கு பிடித்து, மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
மாதன் வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூண்டி பகுதி வரை தனியார் வாகனத்தில் சென்ற அவர்கள், அங்கிருந்து ஒரு ஆம்புலன்ஸ் மூலம் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மாதனை பரிசோதித்த மருத்துவர்கள், “வரும் வழியிலேயே மாதன் உயிரிழந்துள்ளார். உரிய நேரத்தில் வந்திருந்தால் உயிரைக் காப்பாற்றயிருக்க வாய்ப்பு இருந்துருக்கும்” என தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாதனின் உறவினர்கள் கூடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது புகார் அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து பேசிய மாதனின் உறவினர்கள், “மயக்கத்தில் இருந்த மாதனை 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்தோம். ஆனால், ‘ஆம்புலன்ஸில் டீசல் இல்லை. உடனடியாக வர முடியாது’ என ஊழியர்கள் தரப்பில் அலட்சியமான பதில் வந்தது. அதன் பிறகே தனியார் வாகனத்தில் பாதி தூரம் வந்தோம். மாதன் மயக்கம் அடைந்து 3 மணி நேரம் கழித்தே மருத்துவமனைக்கு அழைத்து வர முடிந்தது. சரியான நேரத்தில் வந்திருந்தால் உயிரைக் காப்பாற்றயிருக்க முடியும். வாகன வசதியோ மருத்துவ வசதியோ இல்லாத இந்த பகுதி மக்கள் முழுமையாக அரசாங்கத்தை மட்டுமே நம்பியிருக்கிறோம். இப்படி கை விடுவார்கள் என தெரியவில்லை. உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”என கண்ணீர் வடிக்கின்றனர்.
இது குறித்து கூடலூர் வருவாய்த்துறை அலுவலர்கள், “108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அலட்சியமாக செயல்பட்டதாலேயே மாதன் என்ற பழங்குடி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் புகார் அளித்தனர். புகார் அளிக்க வந்தவர்களை சமாதானம் செய்து இறந்தவரின் உடலை ஒப்படைத்தோம். ஆர்.டி.ஓ தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம்” என்றனர்.