சென்னை:
தமிழக உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் (PACKAGED DRINKING WATER) தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு புகார்கள் வரப்பெற்றுள்ளது. மேலும் தரமற்ற குடிநீரை அருந்துவதால் காலரா, டைபாய்டு, அமீபியாசிஸ், வயிற்றுபோக்கு, இ-கோலி தொற்று ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது.
பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரில், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட தரங்கள் குறைவாக இருப்பின் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பாட்டில் குடிநீர் உற்பத்தி செய்யும் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் மற்றும் இந்திய தர நிர்ணய அமைப்பில் (BIS) வழங்கப்படும் உரிமம் ஆகியவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். தயாரிப்பு நிறுவனங்களில் ஆரம்பம் முதல் இறுதி நிலை வரை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்–2006 மற்றும் ஒழுங்குமுறைகள்–2011ல் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக 20 லிட்டர் கேன்களில் லேபிள்கள் தெளிவாக ஒட்டப்பட்டிருக்க வேண்டும், ஒவ்வொரு முறையும் குடிநீர் நிரப்பும் முன்பு கேன்கள் நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட வேண்டும். பாட்டில் குடிநீர் உற்பத்தியின் போது அதன் தரம் குறித்து ஆய்வு செய்த பின்பே நுகர்வோர் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்ய வேண்டும். உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகள் விதிகளின் படி கேன்களின் மீதுள்ள லேபிள்களில் உணவு பாதுகாப்பு துறையின் உரிம எண், இந்திய தர நிர்ணய அமைப்பால் வழங்கப்பட்ட உரிம எண், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் முழுமையான முகவரி, நிகர எடை, லாட் / கோடு / பேட்ஜ் எண், தயாரிப்பு தேதி, பயன்படுத்த கூடிய கால அளவு உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற வேண்டும். பொதுமக்கள் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை கடைகளில் வாங்கும் பொழுது மேற்குறிப்பிட்ட விபரங்கள் உள்ளதா? என சரிபார்த்து வாங்க வேண்டும்.
உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அனைத்து விற்பனை நிலையங்களில் பாட்டில் குடிநீரின் 1640 மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டதில் 694 மாதிரிகள் தரமானது எனவும், 527 மாதிரிகள் பாதுகாப்பற்றது எனவும், 419 மாதிரிகள் தரம் குறைவானது / தப்புக்குறியிடப்பட்டது எனவும் அறிக்கை பெறப்பட்டுள்ளது. பாதுகாப்பற்றது என அறிக்கை பெறப்பட்ட பாட்டில் குடிநீரை உற்பத்தி செய்த தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் – 2006 – ன் படி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 74 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு ரூ.12.84 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தரம் குறைவானது / தப்புக்குறியிடப்பட்டது என அறிக்கை பெறப்பட்ட பாட்டில் குடிநீரை உற்பத்தி செய்த தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது நீதிமன்றத்தில் 334 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 227 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு ரூ.39.69 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாட்டில் குடிநீர் உற்பத்தி செய்யும் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அனைத்து விற்பனை நிலையங்களிலும் உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் தொடர் ஆய்வுகள் மற்றும் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களில் உள்ள குறைபாடுகள் குறித்து 9444042322 என்ற ‘வாட்ஸ்அப்’ எண்ணிற்கு அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளிக்கலாம்.
இவ்வாறு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.