பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் எதிர்பாராத மரணம் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்குக் கன்னடத் திரையுலகம் மட்டுமின்றி கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து திரைப் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். நிறைய பேர் நேரிலேயே சென்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரது ரசிகர்கள் பலரும் கூடி அழுதது ஒட்டுமொத்த இந்தியாவையுமே உலுக்கியது.
தற்போது அவரது நடிப்பில் உருவாகிவந்த படங்களின் பணிகளை அவரது மூத்த சகோதரர் சிவராஜ்குமார் பார்த்து வருகிறார். புனித்துக்குப் பதிலாக சிவராஜ்குமார் டப்பிங்கும் பேசிவருகிறார். வரும் மார்ச் 17-ம் தேதி அவரின் அடுத்த படமான ‘ஜேம்ஸ்’ வெளியாகவிருக்கிறது.
இதனிடையே புனித் ராஜ்குமாரின் மறைவின் போது நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாமல் போனது. இதனால் தற்போது அவரின் நினைவிடத்துக்கு காரிலேயே சென்று அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பியிருக்கிறார் விஜய்.
அவருடன் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் பெங்களூர் மன்றத்தின் பொறுப்பாளர்கள் சரவணன், ராஜா, தேவா ஆகியோரும் உடன் சென்றனர். புனித் ராஜ்குமாரின் சமாதிக்குச் சென்றபோது அங்கே மக்கள் கூட்டம் இருந்ததையடுத்து வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார் விஜய். இது தொடர்பான படங்களும், வீடியோக்களும் தற்போது வைரலாகி வருகின்றன.