ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தேனாம்பேட்டையில் முதலமைச்சர் நாளை காலை தொடங்கி வைக்கிறார்.
இளம்பிள்ளை வாதம் என்னும் போலியோ நோயை ஒழிக்க இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக போலியோ நோய் இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சொட்டுமருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா முழுமைக்கும் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
நாளை இந்தியா முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 43 ஆயிரம் இடங்களில் இந்த முகாம் நடத்தப்பட இருக்கிறது. தமிழகத்தில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 60 பேர் இருக்கின்றனர். இவர்களுக்கு சொட்டு மருந்து வழங்கும் முகாமை தேனாம்பேட்டையில் முதலமைச்சர் காலை 7 மணிக்கு தொடங்கி வைப்பார் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.