கீவ்: உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யப்படைகள் நள்ளிரவு நகரில் கீவ் நகரில் மக்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை ஏவுகணை மூலம் தாக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உக்ரைனில் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. ஆனால், அந்த நகரை தக்க வைப்பதில் உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. இந்த போர் பதற்றத்தால் அந்நாட்டில் உள்ள வெளிநாட்டினர் வெளியேறி வருகின்றனர்.
உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரஷ்ய ராணுவம் உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து, ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் உக்ரைனை ஒட்டிய பல்வேறு எல்லைகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், கீவ் நகரில் உள்ள மக்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை ரஷ்யா ஏவுகணை மூலம் தாக்கியுள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
எங்கள் அற்புதமான, அமைதியான நகரமான கீவில் ரஷ்ய தரைப்படைகள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஆனால் இரவில் நடந்த இந்த தாக்குதல்களில் நகரம் தப்பிப் பிழைத்தது. அதில் ஒரு ஏவுகணை கீவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை தாக்கியுள்ளது. நான் உலக நாடுகளுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். ரஷ்யாவை முழுவதுமாக தனிமைப்படுத்தவும், உலக நாடுகள் தங்கள் தூதர்களை ரஷ்யாவில் இருந்து வெளியேற்றவும், கச்சா எண்ணெய் விற்பனைக்கு தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஷ்ய பொருளாதாரத்தை முடக்க வேண்டும். ரஷ்ய போர் குற்றவாளிகளை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.