கவுண்டமணி – செந்தில் இருவருக்கும் காமெடி டிராக் எழுதியவர்களுள் முக்கியமானவர், ராஜகோபால். ரைட்டராகவும், இயக்குநராகவும், நடிகராகவும் அவர் நமக்கு பரிச்சயம். தற்போது, பட டிஸ்கஷனில் பிஸியாக இருந்தவரை ஒரு தேநீர் இடைவெளியில் சந்தித்து பேசினோம்.
“முதல் படம் ‘வைதேகி கல்யாணம்’ எழுதும்போது மணிவாசகம் ஒருநாள் கவுண்டமணிக்கு போன் பண்றார். அப்ப எனக்கு அவர் அறிமுகம் இல்லை. அப்ப, ”நம்ம ஊரு பூவாத்தா’ மாதிரி காமெடி கலக்கிடணும்’னு கவுண்டமணி அவர்கிட்ட சொல்றார்.
‘ஐயோ என்னை விட ஒரு ஜாம்பவான் இருக்கார். சீன் செமையா சொல்றார். உங்களுக்கு டிராக் அவர்தான் எழுதுறார்’னு மணிவாசகம் பதில் சொன்னார். ‘அவர் யாருப்பா எனக்கு தெரியாமல்’னு கவுண்டமணி கேட்க, ‘ராஜகோபால்னு ஒருத்தர்… செந்தில்தான் அறிமுகப்படுத்தியிருக்கார்’னு சொல்றார் மணிவாசகம்.
‘ஐயோ அந்தப் பையனா… செந்திலுக்கு டபுள் மீனிங் காமெடி எழுதுறவனாச்சே அவன்’னு சொல்லியிருக்கார். அந்தச் சமயம், அதெல்லாம் நான் எழுதியே கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் மேல இருக்கும்.
எப்படியோ அவர்கிட்ட மணிவாசகம் ஏதோ பேசி என்னை ஓகே பண்ணிட்டார். பொள்ளாச்சியில் ஷூட்டிங்கிற்கு டிஷ்கஷன் எல்லாம் முடிச்சிட்டு கிளம்பிட்டோம். ஷூட் ஆரம்பிச்சு ரெண்டு, மூணு நாள் கழிச்சு கவுண்டமணி, செந்தில் வராங்க. படத்தில் கிணத்து மேட்டில் ஒரு காமெடி சீன் வரும். அந்த சீன் எடுக்கும்போது கவுண்டமணி சீனை படிச்சு காட்டச் சொல்றார். நான் அப்பதான் அவருக்கு அறிமுகமாகிறேன். அப்பவே, ‘அண்ணா, படிச்சு காட்டினா ரொம்ப lag ஆக இருக்கும். நான் வாய்விட்டு சொல்றேன்னு சொன்னேன். ஏம்பா, பேப்பர்ல இருக்கிறதைதானே நீ வாயில சொல்லப் போற… படிச்சா ஸ்லோவாக இருக்கும்னா அப்ப அந்த சீன் நல்லா இல்லைன்னு அர்த்தம்’னு சொன்னார். ‘இல்லை அண்ணே… நான் சொல்றேன்’னு சொல்ல, அவர் பேப்பரை கேட்கிறார். இப்படி ரெண்டு பேருக்குள்ளே வாக்குவாதம் வந்து நான் பேப்பரை தூக்கிப் போட்டுட்டு கோவிச்சிட்டு போயிட்டேன்.
போன உடன் அவருக்கு டென்சன் ஆகிடுச்சு. மணிவாசகத்துகிட்ட’நீ வேற சீன் எடு’ன்னு சொல்லிட்டார். நான் கோபத்தில் ஓரமா வண்டி பக்கத்தில் போய் நின்னுட்டு இருந்தேன். செந்தில் அண்ணன் வந்து, ‘ராஜகோபால், அவர் எவ்வளவு பெரிய சீனியர். எல்லாரும் அவர்கிட்ட எவ்வளவு பணிவா பேசுவாங்க. நீ என்ன இப்படி பேசிட்டு இருக்க’ன்னு சொல்லி சமாதானத்துக்குக் கூப்பிட்டுட்டு போனார்.
கவுண்டமணி அண்ணன், ‘சரிப்பா… மத்தவன் எல்லாம் மூக்குல சொல்லுவான். நீ வாயில சொல்லு’ன்னு அவரோட வழக்கமான நையாண்டில சொன்னார். நானும் வாயிலேயே அந்த சீனை சொன்னேன். சொன்னவுடன் அவரே சிரிச்சிட்டு, ‘ஏய் நல்லா தான்பா இருக்கு’ன்னு சொன்னார். உடனே, மணிவாசகம் ‘இதைதானே நாங்களும் சொன்னோம்’னு சொல்ல, பிறகு அந்த சீன் எடுத்தோம்.
இப்படிச் சண்டையில் ஆரம்பிச்சதுதான் கவுண்டமணி அண்ணனுடனான என் சந்திப்பு. பிறகு, கிட்டத்தட்ட 70 படங்கள் கவுண்டமணி அண்ணனே எனக்கு கொடுத்தார். தொடர்ந்து அவர் நடிச்ச படங்களுக்கு நான்தான் காமெடி டிராக் எழுதினேன்” என்றவரிடம் மீண்டும் கவுண்டமணி, செந்தில் கூட்டணி குறித்து கேட்டோம்.
“சீக்கிரமே கவுண்டமணி – செந்தில் கூட்டணியைத் திரையில் பார்க்கப் போறீங்க. கதை, காமெடி டிராக்னு எல்லாமே ரெடியா இருக்கு… நல்ல தயாரிப்பாளர் கிடைச்சாங்கன்னா சீக்கிரமே திரையில் பார்க்கலாம்!’ என்றார்.
இன்னும் பல விஷயங்கள் குறித்து ராஜகோபால் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அந்த பேட்டியை காண லிங்கை கிளிக் செய்யவும்.