இவரால் முடியாது என்ற வார்த்தையை ரஷ்ய அதிபர் புடினிடம் பயன்படுத்தவே முடியாது. எதெல்லாம் முடியாது என்று நினைக்கிறோமோ, அதையெல்லாம் முடித்துக் காட்டுகிறார் புடின் என்று பிபிசி செய்தியாளர் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் இதுவரை இல்லாத அளவுக்கு தனது பிடிவாதத்தையும், உறுதியையும் ஆணித்தரமாக காட்டி வருகிறார்.
உக்ரைன்
மீது போர் தொடுக்க மாட்டேன் என்று கூறி வந்த அவர் திடீரென ராணுவத் தாக்குதலை மேற்கொண்டு அதிர வைத்துள்ளார்.
முப்படைத் தாக்குதலில் சிக்கி உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது பல நகரங்கள், பிரதேசங்கள் ரஷ்யாவிடம் வீழ்ந்துள்ளன. தலைநகர் கீவ் தற்போது முற்றுகைக்குள்ளாகியுள்ளது. விரைவில் அது ரஷ்யப் படையிடம் வீழும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பிபிசி செய்தியாளர் ஸ்டீவ் ரோசன்பர்க் போட்டுள்ள டிவீட் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிடம் ஊமைக் குசும்பு செய்த உக்ரைன்.. பழசை மறக்க முடியாதே பரமா!
இதுகுறித்து அவர் கூறுகையில், புடின் இதையெல்லாம் ஒரு போதும் செய்ய மாட்டார் என்று நான் பலமுறை நினைத்துள்ளேன். ஆனால் அதையெல்லாம் அவர் செய்திருக்கிறார்.
கிரீமியாவை அபகரிக்க மாட்டார் என்று நினைத்தேன். அதை செய்தார்.
டான்பாஸ் நகரை பிடிக்க மாட்டார் என்று நினைத்தேன்.. பிடித்தார்.
உக்ரைன் மீது முழு அளவிலான போரை தொடங்க மாட்டார் என்று நினைத்தேன். செய்து விட்டார்.
இதெல்லாம் செய்ய மாட்டார் என்ற வார்த்தையை விலாடிமிர் புடினிடம் பயன்படுத்தவே முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
இந்த டிவீட்டுக்கு பலரும் கமெண்ட்களைக் குவித்து வருகின்றனர். ஒருவர் கூறுகையில்,புடின் இத்தோடு நிற்க மாட்டார். பால்டிக் நாடுகள் அனைத்திலும் அவர் கை வைப்பார். போலந்து மீது போர் தொடுப்பார். ஜெர்மனிக்குள்ளும் நுழைவார். மொத்த ஐரோப்பாவையும் தன்வசப்படுத்த முனைவார் என்று கூறியுள்ளார்.
உண்மையில் புடின் ஏதாவது சொல்கிறார் என்றால் அதை செய்கிறார் என்பதே கடந்த கால நிலவரமாக உள்ளது. அவர் ஏதாவது பேசினால், மிரட்டினால் நிச்சயம் அதைச் செய்யாமல் விட மாட்டார். உக்ரைன் விவகாரத்திலும் கூட அவர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தார். ஆனால் உக்ரைன்தான் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளது உக்ரைன் என்று பலரும் கூறி வருகின்றனர்.