புதுடில்லி-உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ருமேனியாவில் இருந்து புறப்பட்ட முதல் ‘ஏர் இந்தியா’ விமானம், 219 பயணியருடன் நேற்று இரவு மும்பை வந்தடைந்தது.
அடுத்தடுத்த விமானங்களில், மேலும் பல இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட உள்ளனர்.இந்நிலையில், உக்ரை னில் தவிக்கும் இந்தியர் களை மீட்கும் திட்டத்துக்கு, ‘ஆப்பரேஷன் கங்கா’ என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்குள் நுழைந்து, ரஷ்யா போரிட்டு வருவதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.இதற்கிடையே, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளில், மத்திய அரசு முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளது.
வான்வழி மூடல்உக்ரைனில் வான்வழி மூடப்பட்டுள்ளதால், அங்குள்ள இந்தியர்கள், ஹங்கேரி, போலந்து, ருமேனியா போன்ற உக்ரைன் எல்லையை ஒட்டிய நாடுகளுக்கு வரவழைக்கப்படுகின்றனர்.பின் அங்கிருந்து அவர்கள் சிறப்பு விமானங்கள் வாயிலாக இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்தியர்களை ஒருங்கிணைத்து விமானங்களில் அனுப்பி வைக்கும் பணிகளை மத்திய வெளியுறவுத் துறை வழிகாட்டுதல்களுடன், உக்ரைனில் உள்ள இந்திய துாதரகம் செய்து வருகிறது.
தரையிறக்கம்
இந்நிலையில், ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து, 219 இந்தியர்களுடன் நேற்று பிற்பகல் புறப்பட்ட முதல் ஏர் இந்தியா விமானம், நேற்று இரவு இந்தியாவந்தடைந்தது.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மஹராஜ் சர்வதேச விமான நிலையத்தில் அது தரையிறங்கியது.உக்ரைனில் இருந்து திரும்பிய இந்தியர்களை, அவர்களின் குடும்பத்தினர் ஆரத்தழுவி வரவேற்றனர். மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், மும்பை விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.
இதற்கிடையே, புகாரெஸ்ட்டில் இருந்து நேற்று இரவு இரண்டாவது ஏர் இந்தியா விமானம் இந்தியர்களுடன் புறப்பட்டது.இதேபோல், உக்ரைனின் மற்றொரு அண்டை நாடான ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டில் இருந்து, 250 பேருடன் மூன்றாவது விமானமும் புறப்பட்டது.இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ”உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகள், இரவு பகல் பாராமல், 24 மணி நேரமும் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்தப் பணிகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன்,” என்றார்.இதற்கிடையே, உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் திட்டத்துக்கு, ‘ஆப்பரேஷன் கங்கா’ என, பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் பேச்சுபிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உக்ரைன் அதிபர் வோலேடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று பேசினார்.அப்போது, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது பற்றியும், ரஷ்யாவின் ஒரு லட்சம் ராணுவ வீரர்கள், உக்ரைனுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது குறித்தும் ஜெலன்ஸ்கி பிரதமர் மோடியிடம் தெரிவித்தார். மேலும், ‘இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக உக்ரைனுக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும்; ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும்’ என, பிரதமர் மோடியிடம் ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்து பிரதமர் மோடி கூறியதாவது:இரு நாடுகளும் உடனடியாக போரை நிறுத்திவிட்டு சமாதான பேச்சை துவக்க வேண்டும். போரால் பலர் உயிர் இழந்துள்ளதும், உடைமைகளை இழந்துள்ளதும் வருத்தம் அளிக்கிறது. உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மோடி கூறினார்.
இந்தியர்களுக்கு அறிவுரைஉக்ரைனில் உள்ள இந்தியர்களுக்காக அங்குள்ள இந்திய துாதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:கிழக்கு உக்ரைனில் உள்ள இந்தியர்கள், இருக்கும் இடத்தை விட்டு வெளியேறக்கூடாது.அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை, இருக்கும் உணவு, குடிநீர் ஆகியவற்றுடன் முடிந்தவரை அங்கேயே இருக்க வேண்டும்.உக்ரைன் எல்லைப் பகுதிக்கு செல்ல முடிவு செய்யும் இந்தியர்கள், அதுகுறித்து துாதரக அதிகாரிகளிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
முன்னறிவிப்பு இல்லாமல் எல்லைப் பகுதிக்கு வரும் இந்தியர்களை, அண்டை நாடுகளுக்குள் அழைத்துச் செல்வது கடினமாக உள்ளது. எனவே, இந்தியர்கள் இதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.