மும்பை:
உக்ரைன் நாடு மீது போர் தொடுத்துள்ள ரஷிய ராணுவம் கடந்த மூன்று நாட்களாக தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் இருக்கும் மக்கள் மெட்ரோ ரெயில் சுரங்கபாதைகள் மற்றும் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.
உக்ரைனில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் ஆவார்கள். உக்ரைன்-ரஷியா இடையே எல்லையில் போர் பதற்றம் நிலவியபோதே அந்நாட்டில் இருந்து இந்தியர்கள் வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.
இதையடுத்து சில இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். ஆனால் உக்ரைனில் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான இந்தியர்களால் வெளியேற முடியவில்லை.
தற்போது தாக்குதல் தீவிரமடைந்து இருப்பதால் மாணவர்கள் உள்பட இந்தியர்கள் சுரங்க பதுங்கு குழியில் தஞ்சமடைந்து தவித்து வருகிறார்கள். சண்டை நடந்து வருவதால் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று தூதரகம் அறிவித்தது.
இதற்கிடையே ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை விடுத்தார். இதையடுத்து இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாக புதின் தெரிவித்தார்.
உக்ரைனில் விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் அங்கிருக்கும் இந்தியர்களை மீட்டு வர விமானம் அனுப்பப்பட்டது. இதில் முதல் கட்டமாக 240-க்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் 2-வது விமானம் புறப்பட்டு சென்றபோதுதான் உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து இந்திய மீட்பு விமானம் பாதியிலேயே திரும்பி டெல்லிக்கு வந்தடைந்தது.
இதனால் உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு மாற்று ஏற்பாடுகள் தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தியது. இதில் அவர்களை உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்து, சுலோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு இந்தியர்களை வரவழைத்து அங்கிருந்து மீட்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அந்த நாடுகளான எல்லை பகுதியில் இந்திய தூதரகம் சோதனை முகாம்களை அமைத்தது.
சோதனை முகாம்களுக்கு சாலை மார்க்கமாக வரும்படி இந்தியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அவர்கள் பாஸ்போர்ட், அமெரிக்க டாலர் பணம், கொரோனா தடுப்பு சான்றிதழ் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
சோதனை முகாம்களுக்கு வரும் இந்தியர்களை அண்டை நாடுகளின் தலைநகருக்கு அழைத்து சென்று அங்கிருந்து மீட்பு விமானத்தில் அழைத்து வர திட்டமிடப்பட்டது.
இதற்காக 4 மீட்பு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் 3 விமானங்கள் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டு, ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டுக்கு ஒரு விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த மீட்பு விமானங்களில் இன்றும், நாளையும் இந்தியர்கள் அழைத்து வரப்பட இருக்கிறார்கள்.
உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து ருமேனியா எல்லை 600 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கு செல்ல 11 மணி நேரம் ஆகும். பின்னர் அந்த எல்லையில் இருந்து தலைநகர் புகாரெஸ்டுக்கு செல்ல 9 மணிநேரம் ஆகும். அதேபோல் கீவ்விலிருந்து ஹங்கேரி எல்லையை அடைய 13 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தூதரகத்தின் அறிவுறுத்தலையடுத்து உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அண்டை நாடுகளின் எல்லை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்திய தூதரக சோதனை முகாம்களை நோக்கி புறப்பட்டனர். கிடைக்கும் வாகனங்கள் மூலம் அவர்கள் எல்லை நோக்கி சென்றனர்.
இதில் முதல் கட்டமாக 470-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள், மருத்துவர்கள் உக்ரைனின் செர்னிவிஸ்டி நகரில் இருந்து ருமேனியா எல்லைக்கு பஸ்சில் புறப்பட்டனர். அவர்கள் பொரூப்பே- சீரெட் எல்லையை கடந்து உக்ரைனில் இருந்து ருமேனியாவுக்குள் சென்றனர்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள இந்திய தூதரக சோதனை முகாம்களில் இருந்த அதிகாரிகள் இந்திய மாணவர்களின் விவரங்களை சேகரித்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து ருமேனியா தலைநகர் புகாரெஸ்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இன்று புகாரெஸ்ட் விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த ஒரு ஏர்-இந்தியா விமானத்தில் இந்தியர்கள் ஏற்றப்பட்டனர். பின்னர் அந்த விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டது.
#WATCH | Union Minister Piyush Goyal welcomes the Indian nationals safely evacuated from Ukraine at Mumbai airport pic.twitter.com/JGKReJE1ct
— ANI (@ANI) February 26, 2022
முதல் மீட்பு விமானத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 219 பேர் வந்தனர். அவர்களில் 5 பேர் தமிழர்கள். கேரளாவைச் சேர்ந்த 15 பேர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. உடல்நலம் சரியில்லாதவர்கள், பதற்றத்தில் இருப்பவர்கள் முதல் கட்டமாக மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.
ருமேனியாவில் இருந்து இன்று பிற்பகல் புறப்பட்ட அந்த விமானம் இன்று இரவு 7.50 மணியளவில் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. உக்ரைனில் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்ட இந்தியர்களை மத்திய மந்திரி பியூஷ் கோயல் வரவேற்றார்.
இதையும் படியுங்கள்… உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் நட்பு நாடுகள்- போர் மேலும் தீவிரமடையும்