கீவ் : உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தூதரக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்காமல் எல்லைகளுக்கு செல்ல வேண்டாம் என்று கீவ்வில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சூழலில் உரிய தகவல் அளிக்காமல் எல்லைப் பகுதிகளுக்கு இடம் பெயர்வதால் இந்தியர்களை மீட்பதில் தூதரக அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.உக்ரைனின் மேற்கு பகுதிகளில் உள்ள நகரங்கள் அனைத்தும் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் இருப்பதால் அங்கேயே தங்கி இருப்பது பாதுகாப்பானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கு உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தற்போது இருக்கும் இடத்திலேயே தங்கி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கே கிடைக்கும் உணவுகளை உட்கொண்டு பொறுமையுடன் காத்திருக்குமாறு இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. தேவையில்லாமல் இருப்பிடங்களை விட்டு வெளியே நடமாட வேண்டாம் என்றும் எப்போதும் எச்சரிக்கையுடன் சுற்றுப்புறங்களில் நடப்பதை கண்காணித்தபடி இருக்க வேண்டும் என்றும் இந்திய தூதரக அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.