மெக்சிகோவின் அகபல்கோவில் நடைபெற்று வரும் ஏடிபி டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், ரஷ்யாவின் டேனிஷ் மெத்வதேவை எதிர்கொண்டார். ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் நடாலிடம் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மெத்வதேவ் இன்று மிகவும் ஆக்ரோஷமாக ஆடினார். எனினும், நடாலை வீழ்த்த முடியவில்லை.
போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-3, 6-3 என வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் கேமரான் நோரியை ரபேல் நடால் எதிர்கொள்கிறார்.
பிரிட்டனைச் சேர்ந்த நோரி, கடந்த வாரம் டெல்ரே பீச் கோப்பையை கைப்பற்றிய உற்சாகத்துடன் மெக்சிகோ ஓபன் இறுதிப்போட்டியில் களமிறங்குகிறார். இப்போட்டியில் அவர் நடாலுக்கு கடும் சவாலாக விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோரியுடன் இதுவரை நேருக்கு நேர் மோதிய 3 போட்டிகளிலும் நடால் வெற்றி பெற்றுள்ளார். அதாவது கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன், பார்சிலோனா ஓபன் மற்றும் ரோலண்ட் காரஸ் ஆகிய போட்டிகளில் நடாலிடம் தோல்வியடைந்த நோரி, அந்த போட்டிகளுக்கு பிறகு தன்னை மெருகேற்றி வெற்றி வாகை சூடி வருகிறார்.
அகபல்கோ கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறார் நடால். இதற்கு முன்பு களிமண் தரை ஆடுகளத்தில் 2005 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்றார். கடின ஆடுகளத்திற்கு போட்டி மாற்றப்பட்டபின்னர் 2020ல் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.