நவீன வீட்டு உபயோக சாதனங்களைப் பயன்படுத்துகையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டுமென்பதற்கு கீழேயுள்ள சம்பவமே ஓர் உதாரணம்.
அந்த நபருக்கு வயது 26. காபி குடிக்க விரும்பிய அவர் ஒரு கப்பில் நீர் ஊற்றி அதை மைக்ரோவேவ் ஓவனுக்குள் (microwave oven) வைத்துச் சூடு செய்திருக்கிறார். இது காபி தயாரிக்க அவர் வழக்கமாகச் செய்கிற முறைதான். அன்றைக்கும் அதேபோல ஓவனுக்குள் நீரை வைத்தவர், சிறிது நேரம் கழித்து ஓவனை ஆஃப் செய்துவிட்டு கப்பை வெளியே எடுத்திருக்கிறார். நீர் சூடானதுக்கு ஆதாரமாக நீராவியோ, கொதி நிலையில் வரும் நீர்க்குமிழிகளோ வரவில்லையாம். ஆனால், கப்பிலிருந்த நீரானது அந்த நபரின் முகத்தில் வேகமாகத் தெறித்திருக்கிறது. தற்போது, அவருடைய முகத்தில் இருக்கிற காயங்கள் இரண்டாம் நிலையில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார் மருத்துவர். தவிர, அவருடைய இடது கண்ணின் பார்வை பறிபோகவும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர் தெரிவித்திருக்கிறார்.
மைக்ரோவேவ் ஓவனில் நீரைச் சூடு செய்யும்போது இப்படி நிகழுமா, ஓவனை கையாளும்போது எந்தளவுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென சென்னையைச் சேர்ந்த இன்ஜினீயர் சரவணனிடம் கேட்டோம்.
“பொதுவாக, மைக்ரோவேவ் ஓவன்களில் சென்சிங் இருக்கும். அதனால், அதில் சமைக்கும்போது உள்ளே சூடு அதிகமானவுடனே ஓவன் தானாகவே செயல்படுவதை நிறுத்திவிடும். சில மாடல்களில் ஓவன் சூடானதும் உள்ளே லைட் எரிய ஆரம்பிக்கும். இதை ஓவனின் கதவு வழியாகவே பார்க்கலாம். சில மாடல்களில் லைட் எரிவது வெளியே தெரியாது. அப்போது, ஓவனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டுத் திறந்து பார்க்க வேண்டி வரும்.
ஒருவேளை உள்ளே வைத்த உணவுப்பொருள் சூடாகவில்லையென்றால், மறுபடியும் ஓவனில் தேவையான செகண்ட்ஸை செட் செய்து, மறுபடியும் பாத்திரத்தை உள்ளே வைக்க வேண்டும். கைகளில் கிளவுஸ் போட்டுக்கொண்டுதான் ஓவனுக்குள் வைத்த பாத்திரத்தை எடுக்க வேண்டும்.
சென்சிங் இல்லாமல், கைகளால் அட்ஜஸ்ட் செய்ய வேண்டிய ஓவனை சற்று கவனிக்காமல் விட்டாலும், சூடு தாங்காமல் ஓவனுக்குள் சுற்றுகிற பிளேட் உடையலாம். ஓவனுக்குள் செராமிக் கப்தான் வைக்க வேண்டும். அதுதான் சூடு தாங்கும். நீரைச் சூடு செய்வதில் ஆரம்பித்து பிரியாணி வரை என்ன சமைத்தாலும், அவற்றை உங்களுடைய ஓவன் மாடலில் எப்படிச் சமைக்க வேண்டும் என்பதை டெக்னிக்கலாகத் தெரிந்துகொண்டு செய்தால் பிரச்னை வராது” என்கிறார்.
சென்னையைச் சேர்ந்த, சமையல்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத் தரும் எச்சரிக்கை டிப்ஸ்!
“கேஸ் ஸ்டவ்வில் சமைக்கும்போது நெருப்பு, பாத்திரத்துடன் கனெக்ட் ஆகி உணவுப்பொருள் வேகும். மைக்ரோவேவ் ஓவனைப் பொறுத்தவரை, இதற்குள் இருக்கிற கதிர்கள் உணவுப் பொருள்களின் செல்களுக்குள் ஊடுருவி, செல்களை ஒன்றுடன் ஒன்று உராயச் செய்வதன் மூலம் வேக வைக்கும். நீர், பால் போன்றவற்றை ஓவனுக்குள் வைத்துச் சூடு செய்யும்போது, கூடுதல் நிமிடங்கள் வைத்துவிட்டால், அது எந்த அளவுக்கு சூடாகியிருக்கிறது என்பது தெரியாது. அது தெரியாமல் வெளியே எடுத்தால், கொதிக்கிற நீரோ, பாலோ மேல் நோக்கி தெறிக்கவே செய்யும்.
மைக்ரோவேவ் ஓவனை குனிந்து பார்த்தபடி முகத்துக்கு நேராக திறக்கக் கூடாது. உள்ளேயிருக்கும் கதிர்கள் நம் முகத்தில் படுவதால் முக சருமமும் கண்களும் பாதிக்கப்படலாம். மேலே சொன்ன சம்பவம்போல, ஓவனில் காய்ச்சிய பாலையோ, போட்ட காபியையோ முகத்துக்கு நேராக எடுக்கக் கூடாது. இதேபோல, ஓவனில் சமைத்த பாத்திரத்தையும் பக்கவாட்டில் சற்று தள்ளி வைத்தே திறக்க வேண்டும். முகத்தில் எகிறித் தெறித்துவிடும்.
எந்த மாடல் மைக்ரோவேவ் ஓவனாக இருந்தாலும் கவனமாகத்தான் பயன்படுத்த வேண்டுமென்பதால், குழந்தைகளைக் கையாளவிடாதீர்கள்.
பால் பாட்டில்களை ஓவனுக்குள் வைத்து ஸ்டெரிலைஸ் செய்யாதீர்கள். பாட்டில் உருகிவிடலாம்.
வேலைக்குச் செல்லும் அம்மாக்கள் சிலர் தாய்ப்பாலைச் சேகரித்து ஃபிரிட்ஜில் வைப்பார்கள். இந்த தாய்ப்பாலைச் சூடு செய்ய மைக்ரோவேவ் ஓவனை பயன்படுத்தக் கூடாது.
காய்கறிகளை, அவற்றுக்குள் இருக்கிற ஈரத்தன்மையைக் கொண்டுதான் ஓவன் வேக வைக்கும். இந்த ஈரத்தன்மை குறைவாக இருந்தால் காய்கறி வறண்டுவிடும். இதற்குச் சிறிதளவு தண்ணீரைக் காய்கறிகள்மீது தெளித்து, பிறகு ஓவனுக்குள் சமைப்பதற்கு வைக்க வேண்டும். ஒருவேளை தெளிக்கிற தண்ணீரின் அளவு அதிகரித்துவிட்டாலும் காய்கறிகள் வேகாது.
மைக்ரோவேவ் ஓவனில் சமைக்கும்போது வழக்கமான அளவில் பாதியளவு உப்புதான் சேர்க்க வேண்டும். சரியான அளவு சேர்த்தால், உணவு உப்புக் கரித்துவிடும்.
சமைத்த உணவுப்பொருளை ஓவனிலிருந்து வெளியே எடுத்தாலும், சில நிமிடங்கள் வரைக்கும் அது வெந்து கொண்டேதான் இருக்கும். அதனால், வெளியே எடுத்தவுடன் ருசி பார்க்க முயலக்கூடாது. வாய் வெந்துவிடும். சில நிமிடங்கள் வரை சமைத்த உணவை அப்படியேதான் வைத்திருக்க வேண்டும். இதை ஸ்டாண்டிங் டைம் என்போம்.
மக்காச்சோளத்தை வழக்கம்போல நீருடன் உப்பு சேர்த்து ஸ்டவ்வில் வேக வைப்பதுபோல ஓவனில் வேக வைக்கக் கூடாது. அப்படியே தோலுடனே வைத்து வேக வைக்கலாம். ஆனால், திருப்பித்திருப்பி வைத்தே வேக வைக்க வேண்டும். வெளியே எடுத்தவுடன் உப்பு சேர்த்த நீருக்குள் போட்டு வைத்தால் வெந்த மக்காச்சோளத்தில் உப்பு ஏறிவிடும்.
ஓவனுக்குள் இருக்கிற தட்டின் நடுப்பகுதியில் கதிர்கள் சற்று குறைவாகவே படும். அதனால், பாதாம், முந்திரி போன்றவற்றை வறுக்க வேண்டுமென்றால், இடையிடையே கிளறிவிட வேண்டும்.
நீரும் எண்ணெயும் சேர்த்து ஓர் உணவைச் சமைக்கும்போது சரியாகக் கலந்து ஓவனில் வைக்க வேண்டும். இல்லையென்றால், எண்ணெய் இருக்கிற பகுதி சீக்கிரம் வெந்து, நீர் இருக்கிற பகுதி வேகாமல் இருக்கும்.
உருளைக்கிழங்கை முழுதாக வைத்துச் சமைத்தால் வெடித்துவிடும். முட்டையை ஓட்டுடன் வேக வைக்க முயன்றாலும் வெடித்துவிடும். உருளைக்கிழங்கைக் கழுவி ஜரி வேலைப்பாடு போல எதுவும் இல்லாத பருத்தித்துணி மீது வைத்து, மேலே கத்தியால் கீறி ஓவனில் வேக வைக்க வேண்டும். 3 நிமிடங்களில் வெந்துவிடும். ஆனால், வெளியே எடுத்தவுடனே தோலை உரிக்க முடியாது. நீரில் சிறிது நேரம் போட்டு, பிறகு தோலுரிக்க வேண்டும். அதேபோல உருளையின் எண்ணிக்கையைப் பொறுத்தும், அளவைப் பொறுத்தும் வேகும் நேரம் மாறுபடும். கூடுமானவரை ஒரே அளவான உருளையை வைக்க வேண்டும்.
ஓவனில் தோசை போன்ற க்ரிஸ்பியான ரெசிபிகளை செய்ய முடியாது. நான் கடந்த 30 வருடங்களாக ஓவனைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இங்கே சொல்லியிருப்பது சிறிதளவுதான். ஒரு கேட்ஜெட்டை புதிதாகப் பயன்படுத்த ஆரம்பிக்கையில், அதைப்பற்றி நன்றாக தெரிந்த பிறகுதான் முழுமையாகப் பயன்படுத்த முடியும். மைக்ரோவேவ் ஓவனை பற்றியும் நன்றாகத் தெரிந்துகொண்டால் பாதுகாப்பாக சமைக்க முடியும். மேலே சொன்ன சம்பவம் போன்ற ஆபத்துகள் நேராது.”
`ஓவன்’ கதிர்களால் பிரச்னை வருமா? விளக்கமளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் தேவராஜன்.
“மைக்ரோவேவ் ஓவனில் சமைத்த உணவுப்பொருளைச் சாப்பிட்டால் புற்றுநோய் வரும்; உணவுப்பொருளின் சத்துகள் குறைந்துவிடும் என்றெல்லாம் அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஓர் உணவுப்பொருளைச் சமைக்கும்போது சில சத்துகள் குறைவது வழக்கமான சமையலிலும் நிகழ்வதுதான். தவிர, ஓவனில் ஏற்படும் மைக்ரோவேவ் அலைகள், உணவின் வேதியியல் அமைப்பை மாற்றாது. அவன் தன் செயல்பாட்டை நிறுத்தியவுடன் மின்காந்த அலைகள் இங்கே வெப்பமாக மாறிவிடுவதால் அந்த உணவை உண்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
மைக்ரோவேவ் ஓவனை வீட்டில் பயன்படுத்துகையில், லோ டெம்பரேச்சரில் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள்போலத்தான் பயன்படுத்துகிறோம். ஓவனில் சமைத்த உணவைக் குறைந்தது மூன்று நிமிடங்கள் வெளியே வைத்தால் கதிர்வீச்சின் தாக்கம் முழுமையாக அடங்கியிருக்கும். இதன்பிறகு உண்ணலாம். ஓவனுக்குள் வெளிவருவது நான் அயனைஸிங் ரேடியேஷன்தான். இதனால், அதில் சமைத்த உணவைச் சாப்பிடுவதால் புற்றுநோய் வராது. தவிர, இதுவரை இந்தக் கூற்று நிரூபிக்கப்படவும் இல்லை.”