கீவ்: ரஷ்ய படைகளின் தாக்குதல் திட்டத்தை முறியடித்து விட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியுள்ளதாவது: கீவ் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் எங்களது கட்டுப்பாட்டில் தான் உள்ளது. நகரை பாதுகாக்க முன்வருபவர்களுக்கு ஆயுதங்களை தர தயாராக உள்ளோம். இந்த போரை நிறுத்த விரும்புகிறோம். அப்போது தான் அமைதியாக வாழ முடியும். ரஷ்யாவின் தாக்குதல் திட்டத்தை முறியடித்துள்ளோம். போரை எதிர்த்த ரஷ்யர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். உங்களிடம், எங்களிடமும், உலகத்திடம் பொய் சொல்பவர்களை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தலைநகரை விட்டு வெளியேற மறுப்பு
அமெரிக்க உளவுத்துறை அதிகாரி கூறுகையில், அமெரிக்க அரசின் பாதுகாப்புடன் தலைநகர் கீவை விட்டு வெளியேற உதவி செய்ய தயாராக உள்ளதாக ஜெலன்ஸ்கியிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனை ஏற்க மறுத்த ஜெலன்ஸ்கி, தனக்கு பயணம் தேவையில்லை. ஆயுதங்கள் தான் தேவை எனக்கூறியதாக கூறினார்.
உக்ரைன் வீரரின் உயிர்தியாகம்
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தாக்குதல் 3வது நாளாக நீடித்து வருகிறது. தலைநகர் கீவ்வை பிடிக்க ரஷ்ய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த நகருக்கு வெளியே உள்ள மிக முக்கியமான விமான நிலையத்தை கைப்பற்றி உள்ளதாக ரஷ்ய படைகள் தெரிவித்தன.இந்நிலையில், ரஷ்யாவின் கட்டுப்ாட்டில் உள்ள கிரிமயாவையும், உக்ரைனையும் இணைக்கம் வகையில் உள்ள ஹெனிஸ்செஸ்க் பாலம் வழியே ரஷ்ய படைகள், பீரங்கி வண்டிகளுடன் வேகமாக உக்ரைனுக்குள் நுழைய முயன்றன. இதனால், செய்வதறியாது தவித்த உக்ரைன் வீரர்கள், ரஷ்ய படைகளை தடுக்க அந்த பாலத்தை தகர்ப்பது மட்டுமே முடியும் என்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி, ஸ்காகுன் வோலோடிமிரோவிச் உடனடியாக, அந்த பாலத்தின் மீது வெடிவைத்து தகர்த்தார். அப்போது , அவரும் வெடித்து சிதறி உயர் தியாகம் செய்தார். இதனையடுத்து, அவருக்கு உக்ரைன் ராணுவம் புகழாரம் சூட்டி உள்ளது.
Advertisement