பிரித்தானியா தனது வான்வெளியில் இருந்து ரஷ்ய தனியார் ஜெட் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ரஷ்யாவின் Aeroflot விமான நிறுவனத்திற்கு பிரித்தானியா தடை விதித்தது.
பிரித்தானியாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நேற்று ரஷ்ய வான்வழியில் பறக்க பிரித்தானியா விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை முதல் பிரித்தானியா நிறுவனங்களின் அனைத்து விமானங்களும் மற்றும் டிரான்சிட் விமானங்களும் தடைசெய்யப்படுவதாக ரஷ்ய விமான போக்குவரத்துறை ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், ரஷ்யாவிற்கு மேலும் ஒரு பலமான அடி கொடுக்கும் விதமாக, ரஷ்ய தனியார் ஜெட் எதுவும் பிரித்தானிய வான்வெளியில் பறக்கவோ அல்லது கீழே தொடவோ முடியாது, இந்த தடை உடனடியாக அமுலுக்கு வருகிறது என்று அறிவித்துள்ளது.
“புடினின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானது மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் பயனடையும் எவரும் இங்கு வரவேற்கப்படுவதில்லை. பிரித்தானிய வான்வெளியில் பறக்க முடியாதபடி அல்லது டச் டவுனில் தரையிறங்க முடியாதபடி எங்களது தடையை பலப்படுத்தியுள்ளேன்” என்று பிரித்தானிய போக்குவரத்து செயலாளர் ஷாப்ஸ் ட்வீட் செய்துள்ளார்.